மயிலம் பகுதியில் 2 கொள்ளையர்கள் கைது.

434

விழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனம், மயிலம் ஆகிய பகுதிகளில் தொடர் கொள்ளை  சம்பவங்கள் அதிகரித்துவருகின்றன. இதனை தடுக்க விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவின்பேரில் ஏஎஸ்பி அபிஷேக் குப்தா தலைமையில் ஒரு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இத்தனிப்படையானது கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகிறது.

 இதனிடையே மயிலத்தில் உள்ள முருகன் கோவிலின் பின்புறம் அமைந்துள்ள தைலம் தோப்பில் சந்தேகப்படும்படியாக இரண்டு நபர்கள் சுற்றித் திரிவதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அத்தகவலை அடிப்படையாகக்கொண்டு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.  அப்பகுதியில் சுற்றித் திரிந்த 2  நபர்களை மடக்கிப் பிடித்து போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

அதனைத் தொடர்ந்து போலீசார் அவர்கள் இருவரையும்  தீவிரமாக விசாரித்தனர்.  விசாரணையில் அந்த இரண்டு நபர்களும் சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஓமலூர் அருகே உள்ள கமாண்டப்பட்டி என்ற கிராமத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

மேலும் இவர்கள் இருவரும் தந்தை மகன் என்பது விசாரணையில் வெளிவந்தது. போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் அந்த இரண்டு நபர்களும் மயிலம் மற்றும் திண்டிவனம் பகுதிகளில் தொடர்ந்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து போலீசார்  தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட தந்தை மகன் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடமிருந்து 6 பவுன் தங்க நகைகள் போலீசாரால் கைப்பற்றப்பட்டது.

மேலும் போலீசார் இதுபோன்ற சந்தேகத்துக்கிடமான நபர்கள் மயிலம் மற்றும் திண்டிவனம் பகுதிகளில் சுற்றித் திரிந்தாள் காவல்நிலையத்தில் தகவல் அளிக்குமாறு பொது மக்களிடையே வேண்டுகோள் வைத்துள்ளனர்.

You might also like