KIliyanur: ‘சீல்’ இல்லாத சாராய பாட்டில்கள் கடத்தல்.. 3 பேர் கைது

69

KIliyanur: விழுப்புரம் மாவட்டம், கிளியனூர் இன்ஸ்பெக்டர் பாலமுரளி தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் இரவு கொந்தமூர் சர்வீஸ் சாலையில் வாகன சோதனை நடத்தினர். அப்போது, பைக்கில் வந்த 2 பேரை நிறுத்தி, அவர்கள் கொண்டு வந்த பையை சோதனை செய்தனர். அதில், 20 சீல் வைக்காத சாராய பாக்கெட்டுகள், அரை லிட்டர் சீல் இல்லாத சாராய பாட்டில்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது.

விசாரணையில், மரக்காணம் அடுத்த பழமுக்கல் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த அர்ஜூனன், 36; வானூர் அடுத்த கீழ்கூத்தப்பாக்கம் கன்னியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஆனந்த், 41; என்பவர்கள், புதுச்சேரி, சஞ்சீவி நகரில் உள்ள சாராயக்கடையில் சாராயம் வாங்கி கடத்தி வந்ததும் தெரியவந்தது. இருவர் மீதும் கிளியனூர் போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர். கைதானவர்கள் அளித்த தகவலின் பேரில், சஞ்சீவி நகர் பகுதியில் உள்ள சாராய கடையில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, சீல் இல்லாத 500 மி.லி. கொண்ட 26 சாராய பாட்டில்கள், 180 மி.லி. கொண்ட 40 சாராய பாக்கெட்டுகள், ஒரு சீல் வைக்கும் மெஷின், 100 பிளாஸ்டிக் கவர்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து, சாராயக்கடையின் சேல்ஸ்மேன் புதுச்சேரி, முத்தியால்பேட்டை சோலை நகரை சேர்ந்த வின்சென்ட், 40; என்பவரை கைது செய்தனர். சாராயக்கடை உரிமையாளரான முத்தியால்பேட்டை, கணபதி நகரை சேர்ந்த கிருஷ்ணராஜ் என்பவரை தேடி வருகின்றனர்.

Loading...
You might also like