Villupuram: விழுப்புரத்தில் மகளிருக்கு சுயவேலைவாய்ப்புப் பயிற்சிகள் தொடக்கம்

Villupuram: விழுப்புரத்தில் இந்திய வங்கியின் ஊரக சுயவேலைவாய்ப்புப் பயிற்சி நிறுவனத்தில் 2025-2026 ஆம் ஆண்டுக்கான அழகுக் கலை, துணி ஓவியம் உள்ளிட்ட பல்வேறு பயிற்சி வகுப்புகள் வியாழக்கிழமை தொடங்கப்பட்டன. இப்பயிற்சி வகுப்புகளைத் தொடங்கி வைத்து, மாவட்ட ஆட்சியர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான் பேசியது: கிராமப்புற மகளிர் சுயமாகத் தொழில் செய்து முன்னேற வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தில், அனைத்து மாவட்டங்களிலும் ஊரக சுயவேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி நிறுவனத்தின் மூலமாக துரித உணவுத் தயாரித்தல், அழகுக் கலை, கைப்பேசி பழுதுநீக்கம், சணல் பை தயாரித்தல் உள்ளிட்ட தொழிற்பயிற்சிகளை வழங்க முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.
அதன்படிப்படையில் 2025-2026-ஆம் ஆண்டுக்கான பயிற்சி வகுப்புகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. இந்த பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி பெறுவோருக்கு பல்வேறு வகையான பயிற்சி உபகரணங்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக சுயவேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி நிறுவனத்தில் ஏராளமான மகளிர் பயிற்சி பெற்ற நிலையில், சுயமாகத் தொழில் புரியும் தொழில்முனைவோர்களாகி வருகின்றனர் என்றார் ஆட்சியர். தொடர்ந்து மகளிர் தினத்தையொட்டி, இந்தப்பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி பெற்று தொழில்முனைவோர்களாக உள்ள 10 பேருக்கு தொழில்முனைவோர் விருதையும் ஆட்சியர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான் வழங்கினார்.