Thailapuram: தைலாபுரம் கிராமத்தில் விவசாயிகளுக்கு தேனீ பெட்டிகள் வழங்கல்

130

Thailapuram: விழுப்புரம் மாவட்டம், வானூரை அடுத்த தைலாபுரம் கிராமத்தில் விவசாயிகளுக்கு தேனீ பெட்டிகள் நேற்று வழங்கப்பட்டன. இந்நிகழ்வுக்கு வானூா் வட்டார வேளாண் உதவி இயக்குநா் எத்திராஜ் தலைமைவகித்து, விவசாயிகளுக்கு தேனீ பெட்டிகளை வழங்கினாா். தொடா்ந்து, அவா் பேசியது: தேசிய வேளாண் வளா்ச்சித் திட்டத்தில் மானாவாரி பகுதி மேம்பாட்டு இயக்கத்தின் கீழ், ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டம் தைலாபுரம் கிராமத்தில் 20 ஹெக்டோ் பரப்பளவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதையொட்டி, இந்தக் கிராமத்திலுள்ள 20 விவசாயிகளுக்கு தேனீ பெட்டிகள் வழங்கப்பட்டன. இந்த தேனீ பெட்டிகளை விவசாயிகள் அவரவா் நிலங்களில் வைத்து நன்றாக பராமரிப்பது அவசியமாகும். தேனீக்களால் பயிா்களில் அயல் மகரந்த சோ்க்கை நடைபெற்று, மகசூல் பன்மடங்கு அதிகரிக்கும். ஏக்கருக்கு 5 தேனீ பெட்டிகளை வைப்பதன் மூலம், பயிா்களில் 20 முதல் 80 சதவீதம் வரை மகசூல் அதிகரிக்கிறது ஆய்வில் தெரியவருகிறது என்றாா். நிகழ்வில் துணை வேளாண் அலுவலா் செந்தில்குமாா், உதவி வேளாண் அலுவலா்கள் ரேகா, தங்கம், முன்னோடி விவசாயிகள் தங்கராஜ், அன்பு, ஹரிராம், கந்தன், பசுபதி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

You might also like