பாழடைந்த செஞ்சிக்கோட்டை | கைகொடுக்குமா தொல்லியல்துறை | Gingee News

செஞ்சிக்கோட்டை – வரலாறு | Gingee News
செஞ்சிக்கோட்டை தமிழகத்தின் மிக முக்கியமான கோட்டைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. மிகவும் பழைமையான வாரலாற்று சிறப்பு மிக்க சுற்றுலா தளமாக செஞ்சிக்கோட்டை அறியப்படுகிறது.
அத்தகைய செஞ்சி கோட்டையில் உள்ள பாரம்பரிய கட்டடங்களும் அறிய பொருட்களும் சிதலமடைந்து வருவதை காணமுடிகிறது.
அவற்றைப் பாதுகாக்கவும் புதுப்பிக்கவும் இந்திய தொல்லியல் துறையானது நிதி ஒதுக்க வேண்டும் என செஞ்சி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தளமாக விளங்குவது செஞ்சி கோட்டையாகும். இந்த செஞ்சிக்கோட்டை கிபி 12ஆம் நூற்றாண்டில் கட்டத் துவங்கி 300 ஆண்டுகள் வரை தொடர்ந்து கட்டப்பட்டது. 1,200 ஏக்கர் பரப்பளவில் 3 மலைகளை இணைத்து கட்டப்பட்டுள்ளது.
இன்று வரை அதன் பிரம்மாண்டத்தை பார்த்து பிரமிக்க வைக்கும் வகையில் கட்டடங்களும் சுற்றுச் சுவர்களும் அமைந்துள்ளன.
வெளிநாட்டிலிருந்து தமிழகத்திற்கு சுற்றுலா வருபவர்கள் நிச்சயமாக செஞ்சிக்கோட்டையை ஒருமுறையாவது பார்த்து விட்டு போவார்கள். சுற்றுலா பயணிகளுக்காக இந்திய தொல்லியல் துறையானது புதிதாக கேன்டீன், பொருட்கள் பாதுகாப்பு அறை, கூடுதல் கழிப்பறைகளை கட்டியுள்ளது.
பாதுகாப்பிற்கும் கூடுதலாக காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்திய தொல்லியல் துறையானது சுற்றுலா பயணிகளுக்கான கட்டமைப்புகளை உருவாக்கி வருகிறது.
இருப்பினும் இங்குள்ள பல நூறு ஆண்டு பழமையான பாரம்பரியமிக்க கட்டடங்கள் இடிந்து விழுந்து வருவதைக் கண்டு மக்கள் வேதனை அடைகின்றனர்.
ராஜகிரி கோட்டை
சிறப்புமிக்க இந்தக் கோட்டையை புதுப்பிக்கவும் பராமரிக்கவும் மேலும் கவனம் செலுத்த வேண்டும் என செஞ்சி வாழ் மக்கள் கூறி வருகின்றனர். குறிப்பாக ராஜகிரி கோட்டையின் உச்சியில் உள்ள மணிகூண்டு எப்பொழுது வேண்டுமானாலும் இடிந்து விழக் கூடிய நிலையில் உள்ளது.
இதனை முதலில் சரிசெய்ய வேண்டும் என கூறுகின்றனர். இந்த மணி கூண்டில் பொருத்தப்பட்டிருந்த வெண்கல மணியானது பிரெஞ்சுக்காரர்களின் ஆட்சியின்போது எடுத்துச்செல்லப்பட்டது.
செஞ்சி கோட்டைக்கு மணி மகுடம் சூட்டியது போல் காணப்படும் இந்த மணிக்கூண்டு தற்பொழுது எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் சூழலில் பாழடைந்து காணப்படுகிறது.
இது இடிந்து விழுந்தால் ராஜகிரி கோட்டை தனது பொலிவை இழந்து காணப்படும் இன மக்களின் வேதனை தெரிவிக்கின்றனர்.
மேலும் செஞ்சிக் கோட்டையின் அடையாளமாக திகழக்கூடிய கல்யாண மஹால் சுற்றுலா பயணிகளை அதிகம் கவர்ந்து வருகிறது. இந்த கல்யாண மஹாலானது அரசு விழாக்கள் நடத்த ஆடம்பரமாக சதுரமான குளமும் அதை சுற்றிலும் அறைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் 8 அடுக்குகளில் மாடங்களும் அமைத்து மிக பிரம்மாண்டமாக அக்காலத்திலேயே கட்டியுள்ளனர். வெள்ளை நிறத்தில் இருந்த அந்த கட்டடமானது தற்பொழுது பூஞ்சான் படிந்து கருப்பு நிறமாக மாறி தனது பொலிவை இழந்து காணப்படுகிறது.
மேலும் சுற்றுலா பயணிகளுக்காக கோட்டை வளாகத்தில் குடிநீர் வசதியானது குறைந்த அளவிலேயே செய்து தரப்பட்டுள்ளது.சுற்றுலா வருபவர்கள் குடிநீருக்காக அவதிப்பட்டு வருகின்றனர்.
மேலும் அருகில் உள்ள பிரபலமான வெங்கடரமணர் கோயில், சிவன் கோயில், ஆஞ்சநேயர் கோயில், கிருஷ்ணகிரி கோட்டை பகுதிகளில் சரியாக குடிநீர் வசதி செய்து தரப்படவில்லை என்றும் கூறுகின்றனர்.
செஞ்சிகோட்டை தனது சிறப்பையும் வரலாறையும் புகழையும் இழந்து கொண்டே வருவதை கண்டு அங்குள்ள மக்கள் வருத்தமடைந்துள்ளனர்.
எனவே இந்திய தொல்லியல் துறையானது செஞ்சி கோட்டைக்கு அதிகமான நிதி ஒதுக்கி அதன் வரலாற்றையும் சிறப்பையும் மீண்டும் பெற்றுத் தர வேண்டுமென செஞ்சி நகர மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.