மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் தேரோட்டம் | Melmalaiyanur News

அங்காளம்மன் கோவில் தேர் திருவிழா
மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் தேர் திருவிழாவானது வரும் 1ம் தேதியிலிருந்து கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற உள்ளது. இந்த திருத்தேர் விழாவை முன்னிட்டு மார்ச் 1ஆம் தேதி காலை கோபால விநாயகருக்கு சிறப்பு பூஜை செய்யப்பட உள்ளது. மேலும் அதே நாள் இரவில் கொடியேற்றமும் சக்தி கரக ஊர்வலம் நடைபெற உள்ளது.
மேலும் இரண்டாம் தேதி மயானக்கொள்ளை நடைபெற இருக்கிறது. 3ம் தேதி இரவு 8 மணிக்கு பூத வாகனத்திலும் நான்காம் தேதி இரவு சிம்ம வாகனத்திலும் அம்மன் வீதியுலா நடைபெற உள்ளது.
அதனைத் தொடர்ந்து ஐந்தாம் தேதி பிற்பகல் 3 மணிக்கு முக்கிய உற்சவமான தீமிதி விழா நடைபெற உள்ளது. அன்று இரவே அன்ன வாகனத்தில் அம்மன் வீதியுலா நடைபெற இருக்கிறது.
ஆறாம் தேதி இரவு யானை வாகனத்தில் அம்மன் வீதியுலா நடைபெறுகிறது. ஏழாம் தேதி முக்கிய விழாவான திருத்தேர் வடம் பிடித்தல் உற்சவம் மதியம் 3 மணியளவில் நடைபெற இருக்கிறது.
இவைகளைத் தொடர்ந்து பத்தாம் தேதி இரவு ஒரு மணிக்கு தெப்ப உற்சவம் நடைபெற இருக்கிறது. 13ஆம் தேதி காப்பு களைதலுடன் திருத்தேர் விழா நிறைவடைகிறது.
விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ராமு மற்றும் அறங்காவலர் குழு தலைவர் வடிவேல் செய்து வருகின்றனர்.
மயானக்கொள்ளை, தீமிதி விழா மற்றும் திருத்தேர் விழா அன்று திருவண்ணாமலை, வேலூர், புதுச்சேரி, சென்னை, கடலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய இடங்களிலிருந்து அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருக்கின்றன.
தேர் செய்யும் பணிகள் தீவிரம்
அங்காள பரமேஸ்வரி திருத்தேர் விழாவிற்காக தேர் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்தத் திருவிழாவானது 13 நாட்கள் மாசி பெருவிழாவாக நடைபெற உள்ளது. ஏழாம் நாள் தேரோட்டம் நடை பெறுவதால் அதற்கான பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.
ஆண்டுதோறும் 13 நாட்கள் மாசிப் பெருவிழாவாக நடைபெறும் இந்த திருவிழாவில் ஏழாம் நாள் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக தேரோட்டம் நடைபெறும். இது மிகவும் பிரபலமான தேர் திருவிழாவாகும்.
இந்த தேர் செய்யும் பணியை இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் கஜேந்திரன் உதவி ஆணையர் ராமு ஆகியோர் பார்வையிட்டு வருகின்றனர்.
பணிகள் தரமாகவும் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்குமாறு ஒப்பந்ததாரர்களுக்கு உத்தரவிட்டனர்.
இந்த ஆய்வின்போது அறங்காவலர் குழு தலைவர் வடிவேல் பூசாரி, அறங்காவலர்கள் செந்தில்குமார் பூசாரி, தேவராஜ் பூசாரி, செல்வம் பூசாரி, சரவணன் பூசாரி, ராமலிங்கம் பூசாரி, சந்தானம் பூசாரி மற்றும் கோவில் பணியாளர்கள் உடன் இருந்தனர்.
இந்த தேர் திருவிழாவிற்காக மேல்மலையனூர் திண்டிவனம் மற்றும் விழுப்புரம் ஆகிய பகுதியில் உள்ள பொதுமக்களும் பக்தர்களும் தயாராகி வருகின்றனர்.
தேர் திருவிழாவிற்காக இயக்கப்படும் சிறப்பு பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி தரவேண்டும் என பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
திருவிழாவில் எந்தவித அசம்பாவிதங்களும் நடைபெறாத வண்ணம் போலீசார் அதிக அளவில் பாதுகாப்பு பணிக்காக ஈடுபடுத்தப்பட வேண்டும் எனவும் பொதுமக்கள் கூறி வருகின்றனர்.
மேலும் திருவிழாவில் கூட்ட நெரிசலை குறைக்க காவல்துறையினர் ஏற்பாடு செய்ய வேண்டும் என பொதுமக்கள் காவல்துறைக்கு வேண்டுகோள் வைக்கின்றனர்.