கூட்டேரிப்பட்டில்  போலியோ சொட்டு மருந்து முகாம் | Mailam Latest News

670

கூட்டேரிப்பட்டில்  போலியோ சொட்டு மருந்து முகாம்

தமிழகம் முழுவதும் இன்று (27-2- 2022 ஞாயிற்றுக்கிழமை) போலியோ சொட்டுமருந்து சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இதில் 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் ஏற்கனவே எத்தனை முறை போலியோ சொட்டு மருந்து கொடுத்து இருந்தாலும் தவறாமல் மீண்டும் சொட்டு மருந்து கொடுக்கப்படும் என பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை அறிவித்துள்ளது.

தற்போது விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த மயிலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கூட்டேரிப்பட்டு நான்குமுனை சந்திப்பில் போலியோ சொட்டுமருந்து முகாம் நடைபெற்றது.

இதில் ஐந்து வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டுமருந்து போடப்பட்டது. இந்த மருத்துவ முகாமை ஒன்றிய குழு தலைவர் யோகேஸ்வரி மணிமாறன், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் தேன்மொழி ஆகியோர் துவக்கி வைத்தனர்.

மேலும் மயிலும் வட்டார மருத்துவமனைக்கு உட்பட்ட 98 முகாம்களில் போலியோ சொட்டு மருந்து 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போடப்பட்டு வருகிறது. மேலும் பஸ் நிறுத்தம், ரயில் நிலைய,ம் மயிலம் மலை கோயில் உள்ளிட்ட 7 இடங்களில் மொபைல் கேம்ப் முறையில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டுமருந்து வழங்கப் பட்டு வருகிறது.

மொத்தமாக மயிலம் வட்டாரத்தில் 105 முகாம்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.

கூட்டேரிப்பட்டு நான்குமுனை சந்திப்பில் நடைபெற்ற போலியோசொட்டு மருந்து முகாமில் கூட்டேரிப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் அருணா சுகுமாரன், மயிலம் ஒன்றிய செயலாளர் மணிமாறன், மாவட்ட கவுன்சிலர் விஜயன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் ஒன்றிய கவுன்சிலர்கள் செல்வகுமார், நிவேதா ஜெய்சங்கர், கிளைச் செயலாளர்கள் இனாயத்துல்லா, குமார், ஒன்றிய பிரதிநிதிகள் ஜனார்த்தனன், ராஜா, சுகாதார மேற்பார்வையாளர் துரைசாமி, செவிலியர் சுடர்கொடி, ஊராட்சி செயலர் நடராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

சாலை விரிவாக்க பணிகள்

மயிலம் கூட்டேரிப்பட்டிலிருந்து தழுதாளி வரை சாலை விரிவாக்க பணிகள் நடைபெற உள்ளது. இதற்காக கூட்டேரிப்பட்டு நான்குமுனை சந்திப்பில் இருந்து தழுதாளி கிராமம் வரை இருக்கின்ற சாலையை அளவிடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

நேற்று மயிலம் பஸ் நிலையம் அருகே சாலை ஆய்வாளர் சக்தி முருகன் தலைமையில் சாலை அளவீடு பணி நடைபெற்றது. மேலும் பொறியாளர்கள் சாலைப்பணியாளர்கள் உடனிருந்தனர்.

இல்லம் தேடி கல்வித்திட்ட பணியாளர்களுக்கு பயிற்சி :

கூட்டேரிப்பட்டு அடுத்த ஆலகிராமம் அரசு மேல்நிலைப்பள்ளியில் இல்லம் தேடி கல்வித்திட்ட பணியாளர்களுக்கு பயிற்சி முகாம் நடைபெற்றது.

இந்த பயிற்சி முகாமை ஆலகிராமம் அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ரவி துவக்கி வைத்தார். வட்டார வள மைய மேற்பார்வையாளர் தட்சிணாமூர்த்தி ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் அருள் குமரன் சிறப்புரையாற்றினார்கள்.

மேலும் முகாமில்இல்லம் தேடி கல்வித்திட்ட தன்னார்வலர்கள் கல்வி, மேலாண்மை குழுவினர், பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்றனர். மேலும் வட்டார வள மைய கருத்தாளர்கள் தாமோதரன் ஆனந்தி ஆகியோர் தன்னார்வலர்களுக்கு பயிற்சி வழங்கினர். முகாமின் இறுதியில் தன்னார்வலர் ஹரிப்ரியா நன்றியுரையாற்றினார்.

தென்பசார் அருகே இருசக்கர வாகனம் விபத்து

கூட்டேரிப்பட்டு அடுத்த தென்பசியார் அருகே இருசக்கர வாகனமானது சாலையின் அருகே இருந்த டெலிபோன் கம்பத்தின் மீது மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் படுகாயமடைந்தனர்.

திண்டிவனம் அடுத்த வட ஆலப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர்கள் முரளி மற்றும் கருணாகரன். இருவரும் கொத்தனார் வேலை செய்துவருகின்றனர். நேற்று காலை இருவரும் வேலை நிமித்தமாக கூட்டேரிப்பட்டிற்கு ஸ்ப்ளெண்டர் பைக்கில் வந்தனர்.

இருசக்கர வாகனத்தை முரளி ஓட்டி வந்துள்ளார். சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தென்பசியார் அருகே கட்டுப்பாட்டை இழந்த வாகனமானது சாலையோரம் அமைக்கப்பட்டிருந்த டெலிஃபோன் கம்பத்தின் மீது மோதியது.

இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே முரளி உயிரிழந்துள்ளார்.மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

You might also like