Tindivanam: திண்டிவனம்: போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த சாலையோர மீன் கடைகள் அகற்றம்

108

Tindivanam: திண்டிவனம் நகராட்சி பகுதியிலுள்ள ஓ. பி. ஆர். பூங்கா அருகே மீன்மார்க்கெட் உள்ளது. குறுகிய இடத்தில் மீன் மார்க்கெட் உள்ளதால், திண்டிவனம் செஞ்சி ரோடு, மரக்காணம் ரோடு, எம். ஆர். எஸ். ரயில்வே கேட், தீர்த்தக்குளம், பெலாக்குப்பம் ரோடு உள்ளிட்ட பல இடங்களில் சாலையோரம் மீன்கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் திண்டிவனம்-செஞ்சி ரோட்டிலுள்ள தண்ணீர் டேங்க் அருகே வேன் ஸ்டேண்டு உள்ள இடத்தை மீன்வியாபாரிகள் ஆக்கிரமித்து சாலையோரம் மீன்களை சுகாதாரமற்ற முறையில் விற்பனை செய்து வருகின்றனர். மீன்கடைகளை போக்குவரத்திற்கு இடைஞ்சலாக வைத்து விற்பதால், மீன்களை வாங்க வருபவர்கள் சாலையில் வாகனங்களை நிறுத்தி மீன்களை வாங்குவதால், அடிக்கடி விபத்து ஏற்பட்டு வந்தது. இதுகுறித்து சமீபத்தில் தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதை தொடர்ந்து நேற்று காலை ரோஷணை போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் ஆனந்தராசன் தலைமையில் போலீசார் சாலையோரமிருந்த மீன்கடைகளை அப்புறப்படுத்தி, போக்குவரத்திற்கு இடைஞ்சல் இல்லாத வேறு இடத்தில் மீன்கடைகளை வைத்துக்கொள்ள வேண்டும் என்று எச்சரித்து மீன் வியபாரிகளை அனுப்பி வைத்தார்.

You might also like