Srilankan: இலங்கைத் தமிழா் குடியிருப்புக் கட்டுமானப் பணிகள்.. எம்பி ஆய்வு

Srilankan:விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகிலுள்ள கீழ்புத்துப்பட்டில் இலங்கைத் தமிழர்களுக்கான குடியிருப்புகளின் கட்டுமானப் பணிகளை விழுப்புரம் தொகுதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி துரை. ரவிக்குமார் எம்.பி. வியாழக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார். கீழ்புத்துப்பட்டில் இலங்கைத் தமிழர்களுக்காக 440 வீடுகளின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த கட்டுமானப் பணிகளை வியாழக்கிழமை பார்வையிட்ட விழுப்புரம் எம்.பி. துரை. ரவிக்குமார், மக்களவைத் தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் கட்டப்படும் நியாயவிலைக் கடையின் கட்டுமானப் பணியின் நிலை குறித்தும் ஆய்வு செய்தார்.
வீடுகளின் கதவு ஜன்னல்களுக்கு வண்ணம் தீட்டும் முன் துருவை நீக்கி விட்டுச் செய்யும்படி ஒப்பந்ததாரர்களிடம் எம்.பி. அறிவுறுத்தினார். கழிவுநீர்க் கால்வாய் அமைப்பது, டைல்ஸ் பதிப்பது, வீடுகளுக்கு வண்ணம் தீட்டுவது போன்ற பணிகள் தற்போது வேகமாக நடைபெற்று வருவதாகவும், இந்த வேகத்தில் பணிகள் நடைபெற்றால் டிசம்பர் 2-ஆவது வாரத்தில் அனைத்துப் பணிகளும் நிறைவடைந்து விடும் என்றும் எம்.பி. நம்பிக்கை தெரிவித்தார்.