Mailam: மயிலம் ஸ்ரீமுருகன் திருக்கோயிலில் சூரசம்ஹார விழா

Mailam:விழுப்புரம் மாவட்டம், மயிலம் முருகன் கோயிலில் கந்த சஷ்டி சூரசம்ஹார விழா வெகுவிமரிசையாக வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர். பொம்மபுரம் ஆதீனம் கட்டுப்பாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற மயிலம் ஸ்ரீவள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர் கோயிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி விழா நடைபெற்று வருகிறது. அதன்படி நிகழாண்டில் கந்த சஷ்டி பெருவிழா நவம்பர் 2- ஆம் தேதி கலச பூஜைகளுடன் தொடங்கியது. இந்த விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. இதையொட்டி, காலை முதல் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. மூலவருக்கும், உற்சவருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. மூலவர் தங்கக் கவசத்தில் காட்சியளித்தார்.
தொடர்ந்து இரவு 7 மணிக்கு ஸ்ரீபாலசித்தர் சந்நிதியில் ஸ்ரீ முருகர் வேல்வாங்கும் நிகழ்வும், தொடர்ந்து இரவு 9 மணியளவில் சூரசம்ஹாரமும் நடைபெற்றது. பின்னர் ஸ்ரீ சுப்பிரமணியர் கிரிவலம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிகளில், செஞ்சி கே. எஸ். மஸ்தான் எம்எல்ஏ, விழுப்புரம் ஆட்சியர் சி. பழனி மற்றும் திரளானோர் பங்கேற்று வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுரம் ஆதீனம் 20 ஆம் பட்டம் ஸ்ரீலஸ்ரீ சிவஞான பாலய சுவாமிகள் உத்தரவுப்படி கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.