Mailam: தூய்மை பணிகளை விரைந்து முடிக்க முகாம்..ஆட்சியர்

46

Mailam: மயிலம் ஒன்றியம், செண்டூர் ஊராட்சியில் முகாமை தொடங்கிவைத்த ஆட்சியர் சி. பழனி, பின்னர் கூறியதாவது விழுப்புரம் மாவட்டத்தில் திறந்தவெளியில் மலம் கழித்தலற்ற நிலையை உருவாக்கும் நோக்கில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலம் மத்திய, மாநில அரசுகளால் அனைத்து ஊராட்சிகளிலும் தூய்மை பாரத இயக்கம் இரண்டாம் கட்டத் திட்டத்தின் கீழ், தனிநபர் இல்லக் கழிப்பறைகள் கட்டிக் கொடுக்கப்பட்டு வருகின்றன.

நிகழ் நிதியாண்டில் 10,337 எண்ணிக்கையில் தனிநபர் இல்லக் கழிப்பறைகள் கட்டிக் கொடுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, கழிப்பறைகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதைத் தவிர, 26 எண்ணிக்கையில் சமுதாய சுகாதாரக் கழிப்பறைக் கட்டடம், 254 எண்ணிக்கையில் சிறிய அளவிலான சமுதாய கழிப்பறைக் கட்டடம் கட்டுவதற்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, அந்தப் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

திட மற்றும் திரவக் கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ், ஊராட்சிகளில் நெகிழி கழிவு சேமிப்புக் கொட்டகை, சமுதாய உறிஞ்சிக்குழி, செங்குத்து வடிவிலான உறிஞ்சிக்குழி, கிடைமட்ட உறிஞ்சிக்குழி உள்ளிட்ட பிரிவுகளில் 1,690 பணிகளுக்கும் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகளை விரைந்து முடிக்கும் நோக்கில், விழுப்புரம் மாவட்டத்தில் பெருமளவில் தூய்மை பாரத இயக்கப் பணிகள் முகாம் புதன்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது என்று கூறினார்.

You might also like