Thaipoosam: மயிலத்தில் தீமித்து பக்தா்கள் நோ்த்திக்கடன்

Thaipoosam: மயிலம் மலை மேல் வீற்றிருக்கும் புகழ்பெற்ற ஸ்ரீவள்ளி, தெய்வானை சமேத ஸ்ரீசுப்பிரமணியர் கோயிலில் நிகழாண்டு தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு வழிபாடுகள் நடைபெற்றன.
தொடர்ந்து, மலையடிவாரத்தில் அக்னி தீர்த்தக்கரையில் உள்ள ஸ்ரீசுந்தர விநாயருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர், பக்தர்கள் பால், பன்னீர் காவடிகளுடன் மயிலம் முருகன் கோயிலை சென்றடைந்தனர். தொடர்ந்து, நண்பகல் 12 மணி அளவில் கோயிலில் உள்ள ஸ்ரீபாலசித்தர், ஸ்ரீவிநாயகர் மற்றும் வள்ளி, தெய்வானை உடனுறை ஸ்ரீசுப்பிரமணியருக்கு பால் அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்று மகா தீபாராதனை காட்டப்பட்டது.
தொடர்ந்து, மூலவர் தங்கக் கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை 6 மணியளவில் வள்ளி, தெய்வானை உடனுறை சுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் 1,008 சங்காபிஷேகம் நடைபெற்றது. இரவு 9 மணிய அளவில் உற்சவர் மலையைச் சுற்றி கிரிவலம் வந்தார். நிகழ்ச்சிகளில் மயிலம் பொம்மபுரம் ஆதீனம் 20-ஆம் பட்டம் ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் பங்கேற்று பூஜைகளை நடத்தினார். தமிழகம், புதுவை மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் சிறப்பு வழிபாடுகளில் பங்கேற்று காவடி எடுத்தும், தீ மிதித்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்