Villupuram: வடகிழக்கு பருவமழைக்கு தயார்..கால்வாய் சீரமைக்கும் பணி தீவிரம்

Villupuram: அனந்தபுரம் அடுத்துள்ள பனமலை ஏரிக்கு தண்ணீர் வருவதற்கான நந்தன் கால்வாய் அமைத்துள்ளனர். இதில் பல இடங்களில் செடி கொடிகள் முளைத்தும், மண் மேடுகள் ஏற்பட்டும் ஏரிக்கு தண்ணீர் வருவதில் தடைகள் உள்ளன.
இதையடுத்து கடந்த 6ம் தேதி பெண்ணையாறு வடிநில வட்ட கண்காணிப்பு பொறியாளர் தமிழ்செல்வன் நந்தன் கால்வாய் துவங்கும் கீரனூர் அணைக்கட்டில் இருந்து 30 கி.மீ. தூரத்தில் உள்ள கணக்கன்குப்பம் வரை கால்வாயை பார்வையிட்டார்.
இந்த ஆய்வுக்கு பிறகு தேவதானம்பேட்டையில் துவங்கி பழயை நந்தன் கால்வாய் துவங்கும் கணக்கன்குப்பம் வரை தண்ணீர் செல்வதற்கு தடைகள் அதிகமாக உள்ளதால், அந்த 4.50 கி.மீ. தூரத்திற்கான கால்வாயை ஹிட்டாச்சி இயந்திரம் மூலம் துார்வாரி செப்பணிட பொதுப்பணித்துறை அதிகாரிக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து கடந்த 9ம் தேதி முதல் ஹிட்டாச்சி இயந்திரம் மூலம் கணக்கன்குப்பத்தில் துவங்கி தேவதானம்பேட்டை வரையிலான நந்தன் கால்வாயில் துார்வாரி, செடி கொடிகளை அகற்றி செப்பனிடும் பணியை பொதுப்பணித்துறையினர் செய்து வருகின்றனர். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாகி வருவதால் இந்த பருவமழையின் மூலம் கிடைக்கும் மழை வெள்ளத்தை பனமலை ஏரிக்கு கொண்டு செல்வதற்காக பொதுப்பணித்துறையினர் இடைவிடாமல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.