Tindivanam: திண்டிவனத்தில் பொதுமக்கள் போராட்டத்தால் பரபரப்பு

Tindivanam: திண்டிவனம் திந்திரிணீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான தீர்த்தகுளத்தைச் சுற்றி ஆக்கிரமிப்புகள் இருப்பதாக, தனி நபர் ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த மனு மீது விசாரணை நடத்திய ஐகோர்ட், தீர்த்தகுளத்தை சுற்றியுள்ள 64 குடியிருப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு, விழுப்புரம் மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டது. அதன் பேரில் தீர்த்தக்குளம் பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 64 வீடுகளை காலி செய்யுமாறு நகராட்சி சார்பில் நோட்டீஸ் ஏற்கனவே வழங்கப்பட்டது.
இந்நிலையில் நகரமைப்பு ஆய்வாளர் திலகவதி, டவுன் வி. ஏ. ஓ. , (பொறுப்பு) புன்னைவனம் ஆகியோர், நேற்று (நவம்பர் 22) காலை 10: 30 மணியளவில் தீர்த்தகுளம் பகுதியில் ஆக்கிரமிப்பில் உள்ள 64 வீடுகளில் 3 நாட்களுக்குள் காலி செய்ய அறிவுறுத்தி நோட்டீஸ் ஒட்டினர். இதற்கு ஆக்கிரமிப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், பிற்பகல் 1 மணியளவில் 50க்கு மேற்பட்ட பெண்கள் உட்பட ஏராளமானோர், நகராட்சி அலுவலகம் எதிரே ஈஸ்வரன் கோவில் தெருவில் தரையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் திண்டிவனம் பஸ் நிலையத்திற்கு வரும் போக்குவரத்து பாதித்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த டவுன் போலீசார், மறியல் செய்த பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதின் பேரில், 1: 10 மணிக்கு மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது. தொடர்ந்து நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு, தங்களுக்கு மாற்று இடம் வழங்கக் கோரி போராட்டம் நடத்தினர்.