நகராட்சி கவுன்சிலர்களுக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வாழ்த்து

நகராட்சி கவுன்சிலர்கள் பதவியேற்பு – அமைச்சர் பொன்முடி வாழ்த்து
தமிழகம் முழுவதும் நகராட்சித் தேர்தலில் வெற்றிபெற்ற வேட்பாளர்களுக்கு பதவிப்பிரமாண விழா நேற்று நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம், கோட்டக்குப்பம், திண்டிவனம் ஆகிய நகராட்சிகளும் வளவனூர், விக்கிரவாண்டி, திருவெண்ணைநல்லூர், செஞ்சி, மரக்காணம், அரகண்டநல்லூர், அனந்தபுரம் ஆகிய பேரூராட்சிகளிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்களுக்கு பதவிப்பிரமாண விழா நடைபெற்றது.
விழுப்புரம் நகராட்சியில் நகர மன்ற உறுப்பினர்களுக்கு பதவிப்பிரமாண விழாவானது விழுப்புரம் நகராட்சி அலுவலக திறந்தவெளி அரங்கத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் தலைமை தாங்கினார். மேலும் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் வரவேற்புரையாற்றினார். ரவிக்குமார் எம்பி, எம்எல்ஏக்கள் புகழேந்தி, டாக்டர் லட்சுமணன் ஆகியோர் வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு வாழ்த்து சொல்லி பேசினர்.
மேலும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் பேசியதாவது:
விழுப்புரம் நகர மன்றத்திற்கு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை கூறிக் கொள்கிறேன். தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் கூறுவது போல் உள்ளாட்சியில் நல்லாட்சி தொடர வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களும் நகர வளர்ச்சிக்கும் அனைத்து துறை வளர்ச்சிக்கும் கட்சி வேறுபாடின்றி மக்களுக்காக பணியாற்ற வேண்டும். இவ்வாறு வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து பொன்முடி அவர்கள் பேசினார்.
இந்த விழாவில் விழுப்புரம் நகராட்சி விழுப்புரம் சுரேந்திர ஷா வெற்றி பெற்ற அனைத்து நகர்மன்ற உறுப்பினர்களுக்கும் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை.
தமிழ்நாடு முழுவதும் மாசி மாதத்தில் மகா சிவராத்திரி திருவிழா மற்றும் மயான கொள்ளை விழா, தேரோட்டம் ஆகியவை விமர்சையாக கொண்டாடப்பட்டு வருவது வழக்கம்.
குறித்த மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் அனைத்து மாத அமாவாசை தினத்தன்று ஊஞ்சல் உற்சவ விழாவானது சிறப்பாக நடைபெறும்.
ஒவ்வொரு வருடமும் தேரோட்டம், மயானக்கொள்ளை ஆகியவை மிக சிறப்பாக கொண்டாடுவது வழக்கம்.
அதேபோல் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் திருவிழா நிகழ்ச்சிக்காக தமிழகம் முழுவதும் பக்தர்கள் வருகை தந்து அம்மனை தரிசித்து தேரோட்டத்தில் கலந்து கொள்வார்கள்.
எனவே மேல்மலையனூர் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு மார்ச் 7ஆம் தேதி விழுப்புரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 7ம் தேதி அரசு பள்ளி, கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
விடுமுறை அளிக்கப்பட்ட 7 ஆம் தேதியின் வேலை நாளானது 19ஆம் தேதியன்று செயல்படும் என மாவட்ட கலெக்டர் மோகன் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இருந்து மேல்மலையனூருக்கு 7ம் தேதி அன்று அரசு சார்பாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.
இஸ்லாமியர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு.
விழுப்புரம் அடுத்த சேந்தமங்கலம் கிராமத்தை சேர்ந்த இஸ்லாமியர்களுக்கு சொந்தமான இடுகாட்டில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனே அகற்றக்கோரி விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் இஸ்லாமியர்கள் மனு அளித்தனர்.
மனுவில் கூறியதாவது : சேந்தமங்கலம் கிராமத்தில் 100க்கும் அதிகமான இஸ்லாமிய குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். சேந்தமங்கலம் கிராம எல்லையில் இஸ்லாமியர்களுக்காக ஒதுக்கப்பட்ட இடுகாட்டில் உள்ள இடத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.
இதன் காரணமாக தற்போது இஸ்லாமியர்கள் யாரேனும் இறந்தால் முன்பு புதைக்கப்பட்ட இடத்திலேயே மீண்டும் இறந்தவர்களின் உடலை புதைக்கும் அவலம் நேரிடுகிறது.
மேலும் இடுகாட்டில் தண்ணீர் வசதி, மின்சார வசதி, சிமெண்ட் சாலை என எவ்வித அடிப்படை வசதியுமின்றி காணப்படுகிறது.
எனவே இஸ்லாமியர்களுக்கு கொடுக்கப்பட்ட இடுகாட்டுக்கு சொந்தமான இடத்தை அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றி துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு சேந்தமங்கலத்தில் சேர்ந்த இஸ்லாமியர்கள் அளித்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.