Villupuram : 190 கிலோ புகையிலைப் பொருள் பறிமுதல் மூவா் கைது

144

Villupuram : விழுப்புரம் மாவட்ட எஸ். பி. தீபக் சிவாச் உத்தரவின்பேரில், கிளியனூா் காவல் நிலைய ஆய்வாளா் பாலமுரளி மற்றும் போலீஸாா் கிளியனூா் இந்திரா நகா் பகுதியில் செவ்வாய்க்கிழமை வாகன தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது, அந்தக் காரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் இருந்தது தெரியவந்தது.

பின்னா், காரில் இருந்தவா்களைப் பிடித்து விசாரித்தபோது, வானூா் வட்டம், மொரட்டாண்டி, மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகன் கணேஷ் (44), புதுச்சேரி தட்டாஞ்சாவடி, நவசக்தி நகரைச் சோ்ந்த காா்த்திகேயன் மகன் சபரீஷ் (31) என்பதும், இவா்கள் கிளியனூா் இந்திராநகரில் பெட்டிக் கடை நடத்தி வரும் ஏழுமலை மகன் பாஸ்கரிடம் (56) விற்பனை செய்வதற்காக புகையிலைப் பொருள்களை காரில் கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, கிளியனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, கணேஷ், சபரீஷ், பாஸ்கா் ஆகிய மூவரையும் கைது செய்தனா். மேலும், காரில் கடத்திவரப்பட்ட சுமாா் ரூ. 1, 35, 400 மதிப்பிலான 190 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள், காா் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

You might also like