விழுப்புரத்தில் கிடப்பில் போடப்பட்ட பாலம் சீரமைப்பு: பொதுமக்கள் திடீர் சாலை மறியல்!
Villupuram News : விழுப்புரம் மகாராஜபுரம் ரத்தினசாமி லே-அவுட் செல்லும் பாதையில் உள்ள கோலியனூரான் வாய்க்கால் கல்வெர்ட் பாலம் சில நாட்களுக்கு முன் சேதமடைந்தது. இதற்கான சீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்ட போதிலும், பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டு பல நாட்களாகக் கிடப்பில் போடப்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள், சீரமைப்புப் பணியை உடனடியாகத் தொடங்கக் கோரி விழுப்புரம் – புதுச்சேரி சாலையில் மரக்கட்டைகளைப் போட்டு நேற்று காலை 9:00 மணியளவில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விழுப்புரம் டவுன் காவல்துறையினர், போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் தீவிர பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, பாலத்தின் கட்டுமானப் பணியை எவ்வித தாமதமுமின்றி உடனே தொடங்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாகப் போலீசார் உறுதியளித்தனர். இதனைத் தொடர்ந்து, காலை 9:15 மணிக்கு பொதுமக்கள் மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனர். இந்தத் திடீர் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு நிலவியது.