தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் பணிகள் வழங்காததை கண்டித்து மறியல்

12

செஞ்சி: தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் பணிகள் வழங்காததை கண்டித்து பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் ஒன்றியம் மரக்கோணம் ஊராட்சியின் துணை கிராமங்களாக ஞானோதயம், அருள்நாடு, பின்னனூர், கம்மந்தாங்கல், பழைய மரக்கோணம், புதுமரக்கோணம், ஆகிய கிராமங்கள் உள்ளன.இதில், பழைய மரக்கோணம் பகுதிக்கு கடந்த 2 ஆண்டாக ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணிகள் வழங்கப்படவில்லை என கூறி நேற்று காலை 10.30 மணிக்கு செஞ்சி-சேத்துப்பட்டு சாலை மரக்கோணம் கூட்ரோட்டில் கிராம மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.தகவலறிந்து வந்த வளத்தி, மேல்மலையனூர் போலீசார், ஒன்றிய அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதால் காலை 11 மணியளவில் மறியல் விலக்கி கொள்ளப்பட்டது.இதன் பிறகு அங்கு வந்த செஞ்சி தொகுதி எம்.எல்.ஏ., கணேஷ்குமார், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அவர்களின் கோரிக்கைகளை கேட்ட பின்னர் பி.டி.ஓ., விடம் மொபைல் போன் மூலம் பேசி, பழைய மரக்கோணம் பகுதிக்கு தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் உரிய பணிகளை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.சாலை மறியல் காரணமாக செஞ்சி-சேத்துப்பட்டு சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

You might also like