மயிலம் அருகே விவசாயி வீட்டில் 3 சவரன் நகை மற்றும் வெள்ளிப் பொருட்கள் திருட்டு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை!

74

Mailam News : விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த முப்புலி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி சுகுமார் (65). கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு சுகுமார் வீட்டின் வராந்தாவிலும், அவரது மனைவி பூங்கோதை (60) மற்றும் குடும்பத்தினர் உள்ளே அறையிலும் தூங்கிக் கொண்டிருந்தனர்.

நள்ளிரவில் வீட்டின் உள்ளே நுழைந்த மர்ம நபர்கள், மற்றொரு அறையில் இருந்த பீரோவை உடைத்து அதிலிருந்த 3 சவரன் தங்க நகைகள் மற்றும் 110 கிராம் வெள்ளிப் பொருட்களைத் திருடிச் சென்றுள்ளனர். காலை விழித்து பார்த்தபோது பீரோ திறந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், இது குறித்து உடனடியாக மயிலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த மயிலம் போலீசார், வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் பதிவான கைரேகைகள் மற்றும் தடயங்களைக் கைப்பற்றினர். மேலும், இச்சம்பவத்தில் தொடர்புடைய மர்ம நபர்களை தீவிரமாகத் தேடி வருகின்றனர். கிராமப் பகுதியில் நள்ளிரவில் அரங்கேறியுள்ள இத்தகைய துணிகரத் திருட்டுச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

You might also like