திண்டிவனம்-மயிலம் சாலையில் சென்டர் மீடியன் இடைவெளியால் தொடரும் விபத்துகள்: தடுப்புச்சுவர் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை
Tindivanam News : திண்டிவனம் மேம்பாலப் பேருந்து நிலையம் முதல் ஜக்காம்பேட்டை நகர எல்லை வரையிலான திண்டிவனம்-மயிலம் நான்கு வழிச்சாலையில், வாகனங்கள் சாலையைக் கடப்பதற்காக சென்டர் மீடியனில் ஐந்திற்கும் மேற்பட்ட இடங்களில் இடைவெளி விடப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் இச்சாலையில் இடைவெளிகள் இன்றி சென்டர் மீடியன் மூடப்பட்டிருந்ததால் விபத்துகள் இன்றி போக்குவரத்து சீராக இருந்தது. ஆனால், தற்போது வாகனங்கள் குறுக்கே புகுந்து செல்வதால் தினந்தோறும் விபத்துகளும் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன.
சமீபத்தில், சென்டர் மீடியன் வழியாகச் சாலையைக் கடந்த தம்பதியினர் மீது தனியார் பேருந்து மோதியதில் மனைவி உயிரிழந்தார். அதேபோல், நேற்று மயிலம் ரோட்டில் குறுக்கே புகுந்த சரக்கு வாகனத்தின் மீது இருசக்கர வாகனம் மோதியதில், சஞ்சீவிராயன்பேட்டையைச் சேர்ந்த கருப்பசாமி (28) என்பவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே திண்டிவனம்-மரக்காணம் சாலையில் இதுபோன்ற விபத்துகளைத் தடுக்க நான்கு அடி உயர கான்கிரீட் தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டதால் விபத்துகள் முற்றிலும் குறைந்துள்ளன. அதேபோல், திண்டிவனம்-மயிலம் சாலையிலும் சென்டர் மீடியன் இடைவெளிகளை அடைத்து, நிரந்தர தடுப்புச்சுவர் அமைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.