விக்கிரவாண்டி அருகே சோகம்: பள்ளி வேன் சக்கரத்தில் சிக்கி 2 வயது குழந்தை உயிரிழப்பு
Vikravandi News : விக்கிரவாண்டி அருகேயுள்ள தும்பூர் தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி பாலு (30) மற்றும் மகாலட்சுமி (28) தம்பதியினருக்கு ஹேமலேகா (4), நவீன் பிரசாத் (2) என இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்களில் ஹேமலேகா தும்பூரில் உள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி படித்து வருகிறார்.
இந்நிலையில், நவம்பர் 16-ஆம் தேதி காலை 9:00 மணியளவில் மகாலட்சுமி தனது மகள் ஹேமலேகாவைப் பள்ளிக்கு அனுப்புவதற்காக வீட்டின் முன் நின்றிருந்த பள்ளி வேனில் ஏற்றிவிட்டார். அதனைத் தொடர்ந்து ஓட்டுநர் வேனை எடுத்தபோது, வீட்டிற்குள் இருந்த 2 வயது குழந்தை நவீன் பிரசாத் யாரும் எதிர்பாராத விதமாக வேகமாக ஓடிவந்து வேனின் பின் சக்கரத்தில் சிக்கினார். இதில் உடல் நசுங்கிய குழந்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த குழந்தையின் தந்தை பாலு அளித்த புகாரின் பேரில், கெடார் காவல்துறையினர் பள்ளி வேன் ஓட்டுநரான லட்சுமிபுரத்தைச் சேர்ந்த அசோக் குமார் மீது வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.