செஞ்சி அருகே பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான பாறை ஓவியம் கண்டெடுப்பு
Gingee News : செஞ்சி அருகே பென்னகர் கிராமத்தில் பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான பாறை ஓவியம் ஒன்றை, செஞ்சி அரசு கலைக் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் சுதாகர் தலைமையிலான மாணவர்கள் குழு கள ஆய்வின் போது கண்டறிந்துள்ளது.
பென்னகரில் இருந்து கருங்குழி செல்லும் வழியிலுள்ள இப்பாறை ஓவியம் 3 அடி உயரமும், 1 அடி அகலமும் கொண்டது. அக்காலத்தில் வண்ணங்களைப் பயன்படுத்தாமல், சிறிய கல்லைக்கொண்டு பாறையின் மேற்பரப்பைத் தேய்த்து இந்த ஓவியம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதில் மனிதன் ஒருவன் கையில் கத்தி போன்ற ஆயுதத்துடன் வேட்டைக்குச் செல்லும் காட்சியும், அவனுக்கு அருகில் அவனைப் பார்த்தவாறு ஒரு நாய் நிற்கும் காட்சியும் சித்தரிக்கப்பட்டுள்ளது. ஆதிகால மனிதர்கள் வேட்டையாடச் செல்லும்போது நாய்களை உடன் அழைத்துச் சென்ற பழக்கத்தை இக்கண்டுபிடிப்பு தெளிவாக உணர்த்துகிறது.
ஏற்கனவே செஞ்சி கோணை கிராமத்தில் இதுபோன்ற பாறை ஓவியம் கண்டறியப்பட்டிருந்தாலும், அதைவிட பென்னகர் ஓவியம் மிகவும் தெளிவாகவும் சிதைவின்றியும் காணப்படுகிறது. வண்ண ஓவியங்கள் செஞ்சியில் பரவலாக உள்ள நிலையில், பாறையைத் தேய்த்து வரையப்பட்ட அரிதான ஓவியங்கள் பென்னகர் மற்றும் கோணையில் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளன.