ஆலம்பூண்டி சிறுமி மாயமான வழக்கு சரித்திர பதிவேடு குற்றவாளியிடம் விசாரணை.

55

செஞ்சி: செஞ்சி அடுத்த ஆலம்பூண்டியில் 7 வயது சிறுமி மாயமான வழக்கில், சரித்திர பதிவேடு குற்றவாளியிடம் சி.பி.சி.ஐ.டி., போலீசார் 4 மணி நேரம் விசாரணை நடத்தினர்.விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த ஆலம்பூண்டியில் சிறுமி ேஹமலதா மாயமான வழக்கு சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு மாற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து, முதல் நாள் சி.பி.சி.ஐ.டி , எஸ்.பி., ஜவகர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினார்.தொடர்ந்து, டி.எஸ்.பி., கீதா தலைமையிலான குழுவினர் பல்வேறு கோணங்களில் விசாரணை செய்தனர்.இந்நிலையில், காஞ்சிபுரம் சி.பி.சி.ஐ.டி., டி.எஸ்.பி., வேல்முருகன் கூடுதலாக விசாரணையில் இணைந்துள்ளார்.அவர் நேற்று சத்தியமங்கலம் காவல் நிலையத்திற்கு வந்தார். அங்கு, பரதன்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான ராஜதுரையிடம் டி.எஸ்.பி.,க்கள் வேல்முருகன், கீதா ஆகியோர் தொடர்ந்து 4 மணி நேரம் வரை விசாரணை நடத்தினர்.

விசாரணைக்குப்பின், ராஜதுரையை ஆலம்பூண்டியில் சிறுமி படித்து வந்த பள்ளிக்கு அழைத்து வந்து அங்கு மாலை 6:50 மணி வரை விசாரணை நடத்தினர்.

13 வழக்குகள்

ராஜதுரை மீது சத்தியமங்கலம், செஞ்சி, திண்டிவனம், திருவண்ணாமலை, சென்னை கோயம்பேடு, தஞ்சாவூர், திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் திருட்டு, வழிப்பறி, கொலை முயற்சி உள்ளிட்ட குற்றங்கள் தொடர்பாக 13 வழக்குகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.இதனால், சிறுமி மாயமான வழக்கில் அவரிடம் நடத்தப்படும் விசாரணை முக்கியத்துவம் பெற்றுள்ளது.இருப்பினும், சிறுமி மாயமான வழக்கில் ராஜதுரைக்கு தொடர்பு இருப்பது உறுதி செய்யப்படாத நிலையில், சந்தேகத்தின் அடிப்படையில் அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

குடும்பத்தினரிடமும் விசாரணை

இதற்கிடையே, சிறுமியின் பாட்டி சாந்தியிடமும், அக்காவுக்குப் பார்த்துள்ள மாப்பிள்ளையின் தாய் மற்றும் தம்பியிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தினர். சிறுமி மாயமாகி பல நாட்களாகியும் இதுவரை அவர் குறித்த உறுதியான தகவல் கிடைக்காத நிலையில், சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

You might also like