விழுப்புரம் நகராட்சி சிறுவர் பூங்காவில் மண்டியுள்ள புதர்களை அகற்றப் பொதுமக்கள் கோரிக்கை!
Villupuram News : விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் சுமார் ஏழு ஏக்கர் பரப்பளவில் நகராட்சி சிறுவர் பூங்கா அமைந்துள்ளது. இங்கு சிறுவர் விளையாட்டு உபகரணங்கள், உடற்பயிற்சிக் கருவிகள், கிரிக்கெட் பயிற்சி மற்றும் நடைப்பயிற்சிப் பாதைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதனால், தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இங்கு நடைப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக, மாலை நேரங்களில் நகர மக்கள் குடும்பத்துடன் வந்து பொழுதுபோக்கும் பிரதான இடமாக இப்பூங்கா திகழ்கிறது. இரவு 9 மணி வரை குழந்தைகள் மற்றும் பொதுமக்களின் நடமாட்டம் இங்கு அதிகமாகக் காணப்படும்.
இந்நிலையில், தற்போது பூங்காவின் உள்பகுதி மற்றும் நடைபாதை ஓரங்களில் செடிகளும் புற்களும் அதிகளவில் வளர்ந்து புதர்மண்டிக் காணப்படுகின்றன. இதனால், அப்பகுதியில் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்களின் நடமாட்டம் அதிகரித்து வருவதால், பூங்காவிற்கு வரும் குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.
எனவே, பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, பூங்காவில் மண்டியுள்ள புதர்களை உடனடியாக அகற்றித் தூய்மைப்படுத்த நகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.