ஆன்லைன் லிங்க் கிளிக் செய்த கல்லூரி மாணவர்: ரூ. 1 லட்சம் சுருட்டிய சைபர் கும்பல்!
Villupuram News : விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா எறையூர் கிராமத்தைச் சேர்ந்த சோலையப்பன் மகன் அருண்குமார் (20). பொறியியல் கல்லூரி மாணவரான இவர், கடந்த 2-ஆம் தேதி தனது மொபைல் போனில் இணையதளங்களைப் பார்த்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக வந்த ஒரு ‘லிங்க்’கை கிளிக் செய்துள்ளார்.
அந்த லிங்க் பதிவிறக்கம் (Download) ஆனதும், அவரது மொபைல் போன் திடீரென ஹேங் ஆகி இயங்காமல் முடங்கியது. இதையடுத்து, தனது மொபைல் போனைச் சீரமைத்து அவர் பார்த்தபோது, அவரது வங்கிச் கணக்கில் இருந்த ரூ. 1 லட்சம் பணம் ஆன்லைன் மூலம் திருடப்பட்டிருந்தது தெரியவந்து அதிர்ச்சியடைந்தார்.
மர்ம நபர்கள் நூதன முறையில் இந்த நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளது குறித்து அருண்குமார் அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பொதுமக்கள் அடையாளம் தெரியாத சந்தேகத்திற்கிடமான ஆன்லைன் லிங்க்குகளை கிளிக் செய்ய வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.