விழுப்புரத்தில் நள்ளிரவு பயங்கரம்: கழுத்தில் கத்தி வைத்து நகை, பணம் கொள்ளை – சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு

40

Villupuram News : விழுப்புரம் ஆசிரியர் நகரைச் சேர்ந்தவர் ஜானி (49). இவரது மனைவி ஹேமா (44) மற்றும் மகன்கள் சதீஷ், பாபு ஆகியோர் கடந்த 12-ம் தேதி இரவு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தனர். நள்ளிரவு 1.30 மணியளவில் கதவை உடைத்து உள்ளே புகுந்த நான்கு பேர் கொண்ட மர்மக் கும்பல், கத்தி மற்றும் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களைக் காட்டி மிரட்டியது.

ஜானி மற்றும் ஹேமாவின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டிய கொள்ளையர்கள், வீட்டிலிருந்த 16 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.1.16 லட்சம் ரொக்கப் பணத்தைக் கொள்ளையடித்துவிட்டுத் தப்பியோடினர். இதுகுறித்து விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கொள்ளையர்களின் நடமாட்டம் குறித்த கண்காணிப்பு கேமரா (CCTV) காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. அதில், முகமூடி மற்றும் போர்வையால் உடலை மறைத்தபடி நான்கு பேர் கொண்ட கும்பல், அப்பகுதியிலுள்ள ஐந்து வீடுகளின் நுழைவாயில்களை நோட்டமிட்டுச் செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளன. இந்த வீடியோ வெளியானதைத் தொடர்ந்து விழுப்புரம் மக்களிடையே பெரும் அச்சமும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.

You might also like