விக்கிரவாண்டி அருகே நீதிமன்ற உத்தரவு: பாதுகாப்புடன் அகற்றப்பட்ட நீர்நிலை ஆக்கிரமிப்பு
Vikravandi News : விக்கிரவாண்டி அருகே நீர்நிலை ஆக்கிரமிப்புகள் உயர் நீதிமன்ற உத்தரவின்பேரில் காவல்துறையின் பலத்த பாதுகாப்புடன் அகற்றி சீரமைக்கப்பட்டன.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வடக்குச்சி பாளையத்தைச் சேர்ந்த ஜெகன் என்பவர், அப்பகுதியில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற உத்தரவிட்டது.
நீதிமன்ற உத்தரவின்படி, விக்கிரவாண்டி தாசில்தார் மகாதேவன் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் (பி.டி.ஓ.) பாலச்சந்திரன் ஆகியோர் தலைமையில் அதிகாரிகள் நேற்று நடவடிக்கை மேற்கொண்டனர். நீர்வரத்து வாய்க்காலில் அமைக்கப்பட்டிருந்த ஆக்கிரமிப்புகள் ஜே.சி.பி. எந்திரங்கள் மூலம் இடித்து அகற்றப்பட்டு, வாய்க்கால் சீரமைக்கப்பட்டது.
பாதுகாப்புப் பணிகளுக்காக இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் தலைமையில் போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். இந்த ஆய்வின் போது துணை பி.டி.ஓ. பொன்மலர், வருவாய் ஆய்வாளர் கவிதா, தீயணைப்புத் துறை அலுவலர் சுந்தரேஸ்வரன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் (வி.ஏ.ஓ.) சவுந்தர்ராஜன், கேசவன், அபிராமி, பால்ராஜ், உதயகுமார் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.