ரேஷன் கடைகளில் ரூ.30க்கு சன்னரக அரிசி வழங்கப்படுமா? விழுப்புரம் மாவட்ட மக்கள் எதிர்பார்ப்பு.

51

திண்டிவனம்: விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் 30 ரூபாய்க்கு சன்னரக அரிசி வழங்குவதற்கு கூட்டுறவுத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழகத்தில் சில மாதங்களில் அரிசி விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. இதனால், ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அரிசி விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில், கூட்டுறவுத் துறை மூலம் கிலோ 30 ரூபாய்க்கு சன்னரக அரசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு தலா 5 கிலோ வழங்கப்படும் என அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டது.அதன்படி கடந்த 17ம் தேதி சென்னையில் முதல் கட்டமாக ரேஷன் கடைகளில் சன்னரக அரிசி வழங்கும் பணி துவக்கி வைக்கப்பட்டது.தொடர்ந்து தமிழகம் முழுதும் உள்ள கூட்டுறவுக் கடைகள் மற்றும் அமுதம் கூட்டுறவு அங்காடிகள் ஆகிய இடங்களில் படிப்படியாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்திற்காக விழுப்புரம் மாவட்டத்திற்கு 16 டன் அரிசி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.விழுப்புரத்தில் உள்ள மாவட்ட கூட்டுறவு பண்டக சாலையில் சன்னரக அரிசி கிலோ 30 ரூபாய்க்கு வழங்கும் பணியை கடந்த 22ம் தேதி மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் விஜயசக்தி துவக்கி வைத்தார்.அரிசி விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் வகையில், கூட்டுறவு துறை மூலம் சன்னரக அரசி விற்பனை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நகரப்பகுதிகள், கிராமப் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் பொது மக்களுக்கு சன்னரக அரிசி வழங்கப்படவில்லை என்ற குற்றுச்சாட்டு எழுந்துள்ளது.விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் 1162 ரேஷன் கடைகள் உள்ளது. துவக்க விழாவின் போது விழுப்புரத்தில் சன்னரக அரிசி வழங்கும் பணி தொடங்கியது. பிற பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் சன்னரக அரிசி வழங்கப்படாமல் உள்ளதாக பொது மக்கள் தரப்பில் புகராக தெரிவிக்கின்றனர்.குறிப்பாக நகரப்பகுதிகளான செஞ்சி, திண்டிவனம், திருவெண்ணெய்நல்லுார், வானுார் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகள் மற்றும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகளில் மூலம் சன்னரக அரிசி வழங்கப்படாமல் உள்ளது.இதற்கிடையே சென்னை உள்ளிட்ட இடங்களில் சன்னரக அரசி தரமானதாக வழங்கவில்லை என்று பொது மக்கள் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் தரமில்லாத அரிசியை வழங்கினால் பொது மக்கள் மத்தியில் பிரச்னை ஏற்படும் என்பதால் சன்னரக அரிசி வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இதற்கு முன் வெங்காயம் விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் வகையில் ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் வெங்காயம் வழங்கப்பட்டது. ஆனால் வெங்காயம் தரமானதாக இல்லை என்ற புகார் எழுந்ததால், வெங்காயம் வழங்கும் பணி தொடர்ந்து நடைபெறவில்லை.வெளிமார்க்கெட்டில் தரமான அரிசி 60 ரூபாயிலிருந்து 80 ரூபாய் வரை விற்கப்படும் சூழல் உள்ள நிலையில் பொது மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் அரசு சார்பில் 30 ரூபாய்க்கு சன்னரக அரிசி விரைவில் வழங்குவதற்கு கூட்டுறவுத்துறை அதிகாரிகள், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

You might also like