செஞ்சி அருகே 7 வயது சிறுமி மாயம்: 4-வது நாளாக 120 போலீசார் தீவிர தேடுதல் வேட்டை!

54

Gingee News : விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த ஆலம்பூண்டியில் கடந்த அக்டோபர் 12-ஆம் தேதி அதிகாலை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 7 வயது சிறுமி திடீரென மாயமானார். இச்சம்பவம் தொடர்பாக 4 டி.எஸ்.பி.க்கள் மேற்பார்வையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, 120 போலீசார் நான்காவது நாளாகத் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ட்ரோன் கேமராக்கள் மூலம் மலை மற்றும் வனப்பகுதிகளிலும், தீயணைப்புத் துறையினருடன் இணைந்து ஏரி, குளம், ஆறுகளிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் சிசிடிவி காட்சிகள் மற்றும் தொலைபேசி அழைப்புகளும் தீவிரமாக ஆய்வு செய்யப்படுகின்றன. இதனிடையே, கோட்டக்குப்பத்தைச் சேர்ந்த மீனவர்களும் களமிறக்கப்பட்டு குளங்களில் வலைவீசித் தேடி வருகின்றனர்.

எஸ்.பி. மதிவாணன் தலைமையில் ஆலோசனைகள் நடத்தப்பட்டுப் பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வரும்போதிலும், சிறுமி குறித்து இதுவரை எந்தவொரு தடயமும் கிடைக்கவில்லை. இச்சூழலில், சிறுமியின் பெற்றோரைச் சந்தித்து ஆறுதல் கூறிய முன்னாள் அமைச்சர் மஸ்தான், இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. (CBCID) விசாரணைக்கு மாற்ற வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

You might also like