ஏரிகளில் நிலத்தடி நீர் ஆதாரத்தை பாதுகாக்கும் புதிய முயற்சி துவக்கம்!பருவ நிலை மாற்ற வறட்சியை சமாளிக்க நடவடிக்கை.
விழுப்புரம்: பருவநிலை மாற்ற வறட்சியை சமாளிக்க, ஏரிகளில் செயற்கை நீர் செறிவூட்டும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்தி, நிலத்தடி நீர் ஆதாரத்தை பாதுகாக்கும் புதிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.விழுப்புரம் மாவட்டத்தில், இந்தாண்டு ‘எல்நினோ’ தாக்கத்தின் பருவநிலை பாதிப்பு காரணமாக போதிய மழையின்றி போயுள்ளது.ஆண்டு தோறும் தென்மேற்கு பருவமழையால், 356.66 மி.மீ., கிடைக்கும், ஆனால், இந்தாண்டு, 178.38 மி.மீ., மட்டுமே மழை பெய்துள்ளது. இதனால் விவசாயத்திற்கான போதிய பாசன வசதியின்றி பயிரிடும் பரப்பும் குறைந்து வருகிறது.மேலும் வறட்சியும், நிலத்தடி நீர் ஆதாரமும் பாதிக்கும் சூழல் உள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்தாண்டு பெய்யும் மழையினை பயனுள்ளவாறு சேமித்தும், அதனை விவசாயத்திற்கு பயன்படுத்தி பரவலாக பயிரிடவும் அரசு தரப்பில் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது.இதன் ஒரு பகுதியாக, ஊரக வளர்ச்சித்துறை சார்பில், ஏரிகளில் மழைநீரினை தேக்கி நிலத்தடிநீரை பாதுகாக்கும் திட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.விழுப்புரம் மாவட்டத்தில், ஊரக வளர்ச்சித்துறை சார்பில், ஏரிகளில் மழை நீரை சேகரிக்கும் வகையில், செயற்கை நீர் செறிவூட்டும் கட்டமைப்பு ஏற்படுத்தும் பணிகளை துவக்கி உள்ளனர்.இது குறித்து ஊரக வளர்ச்சித்துறை பொறியாளர்கள் கூறியதாவது:மாவட்டத்தில், பருவநிலை மாற்றத்தின் காரணமாக மழை பொழிவு குறைந்துள்ளதால், எதிர்வரும் காலங்களில் பருவமழையின் போது, தேங்கும் மழை நீரை நீர்நிலைகளில் தேக்கி வைத்தும், அதனை வீணடிக்காமல் நிலத்தடி நீரை செறிவூட்டும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது.மொத்தம், 13 ஒன்றியங்களில், ஊரக வளர்ச்சித்துறை ஏரிகள் மற்றும் பொதுப்பணித்துறை ஏரிகளில் இத்திட்டம் செயல்படுத்த உள்ளது. இதன்படி, ஏரிகளில் செயற்கை நீர் செறிவூட்டும் மீள் நிரப்பு குழாய் கட்டமைப்பு அமைக்கப்படுகிறது.இதற்காக, ஏரிகளில் நீர் தேங்கும் பகுதியில், மழை நீரை உள்செலுத்தும் விதத்தில், 6 அடி ஆழம் பள்ளம் தோண்டப்பட்டு, 6 படிகளாக சிமெண்ட் உரை கிணறுகள் அமைக்கப்படும்.அதன் மையத்தில் 20 மீ., ஆழத்திற்கு 6 அங்குல பிளாஸ்டிக் குழாய் பதிக்கப்படும். அதனை சுற்றிலும் 40 செ.மீ., அளவில் ஒன்றரை அங்குள ஜல்லி கற்களும், பிறகு, 40 செ.மீ., அளவில் முக்கால் ஜல்லி கற்களும் கொட்டப்படும், அதன் மேல், எம்.சாண்ட் மணல் நிரப்பப்படும்.இந்த மழைநீர் கட்டமைப்பு மூலம், ஏரியில் தேங்கும் மழைநீர், ஜல்லிகளில் ‘பில்டர்’ செய்து, நிலத்திற்குள் இறங்கும். இதன் மூலம் நிலத்தடி நீர் உயர்த்தப்படும்.இதேபோல், ஒவ்வொரு ஏரியிலும், இந்த செயற்கை நிலத்தடி நீர் கட்டமைப்பு மூலம் நிலத்தடி நீரை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.தற்போது, வல்லம், மேல்மலையனுார், மயிலம் வட்டாரங்களில் பணிகள் நடக்கிறது. தொடர்ந்து, அனைத்து வட்டாரங்களிலும் ஏரிகளில் இந்த கட்டமைப்பு அமைக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.