விழுப்புரம் அருகே பல்லவர் கால மூத்ததேவி சிற்பம் கண்டெடுப்பு.
விழுப்புரம்: விழுப்புரம் அருகே பல்லவர் கால மூத்ததேவி சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.கஞ்சனுார் அடுத்த கொரலுார் இருளர் குடியிருப்பு குளக்கரையில், தொல்லியல் ஆர்வலர் இம்மானுவேல், கல்லுாரி ஆய்வு மாணவர்கள் ராகுல், செந்தமிழ்ச்செல்வன், தமிழரசன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் களஆய்வு மேற்கொண்டபோது, ஒரு பலகைக் கல்லில் மூத்ததேவி சிற்பமும் மற்றும் குளத்தின் உள்ளே உடைந்த நிலையில் உள்ள விநாயகர் சிற்பத்தையும் கண்டறிந்தனர்.இதுகுறித்து இம்மானுவேல் கூறியதாவது:கொரலுாரில் கிடைத்த மூத்ததேவி சிற்பம், மூன்றரை அடி உயர பெரிய பலகைக் கல்லில் பொறிக்கப்பட்டது. இது பல்லவர் காலத்தைச் சேர்ந்த 1200 ஆண்டுகள் பழமையானதாகும். தலையில் கரண்ட மகுடமும், காதில் மகர குண்டலமும், கழுத்தில் சரப்பணி கழுத்தணியும் அணிந்துள்ளார். மகன் மாந்தன், மகள் மாந்தினியும் அருகில் உள்ளனர்.இந்த மூத்ததேவி சிற்பத்தை மக்கள் வழிபட்டு வருகின்றனர். லட்சுமிக்கு முன்பு தோன்றியவள் என்பதால் மூத்ததேவி என்று குறிப்பிடப்படுகிறாள். காகத்தைக் கொடியாகவும், கழுதையை வாகனமாகவும், துடைப்பத்தை ஆயுதமாகவும் கொண்டுள்ளார்.குளத்தின் அருகே கண்டறிந்த உடைந்த விநாயகர் சிற்பம், சோழர்காலத்தை சேர்ந்ததாகும். விநாயகர் இடக்காலை மடக்கி, வலக்காலை குத்திட்டு அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார். விநாயகர் சிற்பம் சிதைந்த மற்றும் உடைந்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.