திண்டிவனம் கிடங்கல் ஏரி சீரமைப்பு: பொதுமக்கள் பாராட்டு!
Tindivanam News : திண்டிவனத்தில் பல ஆண்டுகளாகத் தூர்ந்துபோய் பயன்பாடின்றி இருந்த 4 ஏரிகள் மற்றும் 13 குளங்களைச் சீரமைக்க அரசு நடவடிக்கை எடுக்காததால், தன்னார்வலர்கள் இணைந்து புனரமைப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இவர்களின் இந்த நற்செயலுக்குப் பொதுமக்கள் மத்தியில் பெரும் பாராட்டு குவிந்து வருகிறது.
‘திண்டிவனம் நீர்நிலைகள் புனரமைப்பு குழு’, ‘நம்ம பசுமை இயக்கம்’ மற்றும் ‘எலைட் ரோட்டரி சங்கம்’ ஆகிய அமைப்புகள் இணைந்து முதற்கட்டமாக துலுக்கானம் ஏரி மற்றும் முருங்கப்பாக்கம் ஏரிகளைத் தூர்வாரின.
தொடர்ந்து, 1,420 ஏக்கர் பரப்பளவு கொண்ட பிரம்மாண்ட கிடங்கல் (1) ஏரியைத் தூர்வாரும் பணி துவக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான், அமைச்சர் வன்னி அரசு உள்ளிட்ட அதிகாரிகள் இந்நிகழ்வுகளில் பங்கேற்றனர்.
தற்போது பொக்லைன் இயந்திரங்கள் மூலம் கரையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, கரைகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன.
ஏரிகளின் நடுவில் பறவைகள் இளைப்பாற தனித் திட்டுகளும் அமைக்கப்பட்டு வருகின்றன.
தன்னார்வலர்கள் மற்றும் அமைப்புகள் மூலம் நன்கொடை திரட்டி இப் பணிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
‘நீர்நிலைகளைப் பாதுகாப்போம்; திண்டிவனத்தைப் பசுமையாக்குவோம்’ என்ற நோக்கத்துடன் செயல்படும் இக்குழுவிற்கு மாவட்ட நிர்வாகம் முழு அரசு உதவிகளையும் வழங்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.