விழுப்புரத்தில் நல்வாழ்வு மையம், ரேஷன் கடை முன் குடிபிரியர்களின் அட்டகாசம்: பொதுமக்கள் அச்சம்!
Villupuram News : விழுப்புரத்தில் நகராட்சி நல்வாழ்வு மையம் மற்றும் ரேஷன் கடை முன் குடிபிரியர்களின் அட்டகாசத்தால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
விழுப்புரம் நகராட்சி 32வது வார்டுக்குட்பட்ட வழுதரெட்டி பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இப்பகுதி மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, ரேஷன் கடை மற்றும் நகர்புற நலவாழ்வு மையம் உள்ளது.
இந்த கட்டடங்களில் இரவு நேரங்களில் குடிபிரியர்கள் மது அருந்தி விட்டு காலி பிளாஸ்டிக் கப்கள், மது பாட்டில்களை உடைத்து அங்கேயே வீசி விட்டுச் செல்கின்றனர்.
இதை அகற்ற வேண்டிய நகராட்சி துப்புரவு பணியாளர்களும் துப்புரவு செய்வதில்லை. இதனால் இந்த கட்டடங்கள் முன் உடைந்த பாட்டில்கள் சிதறிக் கிடப்பதால் பொதுமக்கள் அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது.
சுகாதாரமாக இருக்க வேண்டிய நலவாழ்வு கட்டடம் சுகாதாரமற்ற நிலையில் உள்ளது. இங்கு கண்காணிப்பு கேமராக்களும் இல்லாததால் இந்த அரசு கட்டடங்கள் இரவு நேரங்களில் போதை ஆசாமிகளின் கட்டுப்பாட்டிற்குள் வந்து விடுகிறது.
அதிகாரிகள் கவனித்து, அங்குள்ள சுகாதார சீர்கேட்டை போக்குவதோடு, தொடர்ந்து கண்காணிக்க கண்காணிப்பு கேமராக்களை பொருத்துவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.