திண்டிவனம் பழைய பஸ் நிலையத்தில் கடைகள் கட்டுமான பணியை விரைந்து முடிக்க கோரிக்கை: பயணிகள் அவதி!
Tindivanam News : திண்டிவனத்தில், பஸ்கள் நிறுத்த இடம் இல்லாததால், பழைய பஸ் நிலையத்தில் கட்டப்படும் கடைகளின் கட்டுமானப் பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திண்டிவனத்தில் இந்திரா காந்தி பஸ் நிலையத்தில் கட்டப்பட்டிருந்த நகராட்சி கடைகள் இடிந்து விழும் நிலையில் இருந்ததால், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன், அனைத்து கடைகளும் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, இடித்த இடத்தில் 4.23 கோடி ரூபாய் செலவில், வளாகம் மற்றும் 67 தினசரி நாளங்காடி கட்டுவதற்கான பணிகள் கடந்த 2025ம் ஆண்டு ஜூன் மாதம் துவங்கியது. இந்த பணிகள் ஒராண்டிற்குள் முடிவடைந்து விடும் என கூறப்பட்டது. ஆனால், இதுவரை பணிகள் முடியவில்லை.
இதனால், செஞ்சி, வந்தவாசி திருவண்ணாமலை, ஆரணி உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்குச் செல்லும் அனைத்து பஸ்களும், பஸ் நிலையத்தின் நுழைவு வாயில் பகுதியில் போக்குவரத்து நிறைந்த சாலையில் மயிலம் ரோட்டில் டவுன் போலீஸ் நிலையம் எதிரில் நிறுத்தி பயணிகளை ஏற்றிச்செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் பஸ் பயணிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதியடைகின்றனர்.
பஸ் நிலையத்தில் கடைகள் கட்டும் பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.