யுபிஐ புதிய கட்டணம்; வாடிக்கையாளர்கள் மீது சுமத்தப்படாது; நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதி.
புதுடில்லி: பரிவர்த்தனைகளுக்கான எம்டிஆர் கட்டணம் வாடிக்கையாளர்கள் மீது சுமத்தப்படாது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.தேசிய பணப்பரிவர்த்தனை கழகம், யு.பி.ஐ., எனப்படும், டிஜிட்டல் முறையில் பணம் பெறும் வர்த்தக நிறுவனங்களிடம் இருந்து கட்டணம் வசூலிப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி, ‘2,000 ரூபாய்க்கு மேல் பணம் பெறும் நிறுவனங்கள், 0.4 சதவீதம் கட்டணம் செலுத்த வேண்டும். பரிவர்த்தனை, 75 ஆயிரம் ரூபாய் அல்லது அதற்கு மேல் இருந்தாலும் கட்டணம் 300 ரூபாய் என்ற வரம்புக்குள் இருக்கும்.ரயில்வே, தொலைத்தொடர்பு, எரிபொருள் ஆகிய அத்தியாவசிய துறைகளில் நடைபெறும் பரிவர்த்தனைக்கு ஒரே கட்டணமாக 5 ரூபாயும், பங்குச்சந்தை வணிகத்துக்கான யு.பி.ஐ., பரிவர்த்தனைக்கு 0.02 சதவீதமும் கட்டணமாக வசூலிக்கப்படும்’ என, அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அளித்த பேட்டி: எதிர்க்கட்சியினர் சொல்வது சரியல்ல. ஏனெனில் இது ஒரு வரியோ, செஸ் எனப்படும் கூடுதல் வரியோ அல்லது கூடுதல் கட்டணமோ அல்ல.இதிலிருந்து வசூலிக்கப்படும் தொகை இந்தியாவின் ஒருங்கிணைந்த நிதிக்கு வருவதில்லை. எனவே, முதலில் ஒன்றை நாம் புரிந்துகொள்ள வேண்டும்: இது அரசாங்கம் சார்ந்த விவகாரம் அல்ல. இதற்கான கட்டணத்தைச் செலுத்துபவர் வணிகர்தான். இந்தக் கட்டணம் வாடிக்கையாளர் மீது சுமத்தப்படாது. உண்மையில், 2,000 ரூபாய்க்குக் குறைவான பரிவர்த்தனைகளுக்கு வணிகரிடம்கூட இந்தக் கட்டணம் வசூலிக்கப்படாது.எதிர்க்கட்சிகள் குறை கூறுவதற்கான காரணங்களைத் தேடிக்கொண்டிருக்கின்றன. அவர்களால் இந்த அரசாங்கத்தை விமர்சிக்க முடியவில்லை. தேசிய பணப்பரிவர்த்தனை கழகம், பேமெண்ட் வங்கிகள் முடிவை, நாங்கள்தான் திணித்ததாகக் கூற முயற்சிக்கிறீர்கள். இப்போது, நாங்கள் ஏதோ அழுத்தத்தின் காரணமாக இதைச் செய்ததாக விளம்பரங்கள் மூலம் கூறுகிறார்கள்.கோவிட் பெருந்தொற்றையும் போர்களையும் எதிர்கொண்டு, இந்தியாவின் இறையாண்மையைக் காத்து பொருளாதாரத்தை வளர்ச்சியை நோக்கி கொண்டு செல்கிறோம். இது நான் விதிக்கும் வரியும் அல்ல. எதிர்க்கட்சிகளிடம் இது குறித்து இல்லாத நிலையில், அவர்கள் எல்லாவிதமான குற்றச்சாட்டுகளையும் முன்வைக்கிறார்கள்; அரசின் மீது பழி சுமத்துகிறார்கள். இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.