வெறிச்சோடி கிடக்கும் திண்டிவனம் பஸ் நிலையம்: அரசு, தனியார் பஸ்கள் வராத அவலம்.
திண்டிவனம்: திண்டிவனத்தில் ரூ.27.51 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய பஸ் நிலையத்திற்கு பெரும்பாலான அரசு மற்றும் தனியார் பஸ்கள் வருவதை நிறுத்திக்கொண்டதால், பஸ் நிலையம் வெறிச்சோடி கிடக்கிறது.
திண்டிவனம்-சென்னை சாலையில் ரூ.27.51 கோடி செலவில் 6 ஏக்கர் பரப்பளவில் அனைத்து வசதிகளுடன் புதிய நகராட்சி பஸ் நிலையம் கடந்த பிப்.,4 ம் தேதி அப்போதைய முதல்வர் ஸ்டாலின் காணொளி மூலம் திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. பஸ் நிலையத்தில் நகராட்சி சார்பில் 67 கடைகள் கட்டப்பட்டுள்ளன.
இந்த கடைகளை போட்டி போட்டிக்கொண்டு கவுன்சிலர்களின் ஆதரவாளர்கள் ரூ.3 லட்சம் வரை வைப்பு தொகை கட்டி, மாதத்திற்கு அதிகபட்சமாக ரூ.10 ஆயிரம் வரை வாடகைக்கு எடுத்தனர். பஸ் நிலையத்திற்கு அதிக அளவில் அரசு மற்றும் தனியார் பஸ்கள் வரும் எனவும், கடை வைத்திருப்பவர்களுக்கு அதிக அளவில் வியாபாரம் நடக்கும் என்ற நம்பிக்கையில், கடை உரிமையாளர்கள் இருந்தனர்.இந்நிலையில், பஸ் நிலையம் திறக்கப்பட்டு, 7 மாதங்கள் கடந்த நிலையில், பஸ் நிலையத்தில் மொத்தமுள்ள 67 கடைகளில் 7 கடைகள் மட்டுமே திறந்துள்ளது. மீதமுள்ள கடைகள் அனைத்தும் மூடியே கிடக்கின்றன.இதனால் கடையை வாடகைக்கு எடுத்தவர்கள் கடையை திறக்காமாலேயே நகராட்சிக்கு வாடகை கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த நகர்மன்ற கூட்டத்தில் பஸ் நிலையத்திற்கு பஸ்கள் வராமல் இருப்பதால், கடைகள் திறக்க முடியவில்லை. பஸ் வரத்து அதிகமான பிறகு கடை வாடகை வசூலிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.இதன் பிறகு கலெக்டர் தலைமையில் நகராட்சி கமிஷ்னர், போக்குவரத்து கழக அதிகாரிகள், தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர் பங்கேற்ற கூட்டம் நடந்தது.இதில் அனைத்து பஸ்களும் நிலையத்திற்கு வந்து செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டும், வரத்து எண்ணிக்கை உயரவில்லை.இதற்கு காரணம், புதுச்சேரியிலிருந்து திண்டிவனம் வழியாக திருவண்ணாமலை, செஞ்சி, காஞ்சிபுரம், வேலுார்,பெங்களூரு உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் அனைத்து பஸ்களும், திண்டிவனம் மேம்பாலத்தில் நிறுத்தி பயணிகளை இறக்கிவிட்டு, பஸ் நிலையம் வராமல் செல்கின்றன.இதேபோல் திருச்சி கும்பகோணம், மதுரை, கோயம்புத்துார், சென்னை உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு செல்லும் அரசு விரைவு பஸ்கள் மற்றும் அரசு பஸ்கள் அனைத்தும் திண்டிவனம் மேம்பாலத்தின் கீழ் பயணிகளை இறக்கிவிட்டு, புதிய பஸ் நிலையம் வராமல் செல்கின்றன. திண்டிவனம் மேம்பால பஸ் நிலையம்தான் பிரதான பஸ் நிலையமாக இன்றளவும் செயல்பட்டு வருகின்றது.இதற்கிடையில் பஸ் நிலையத்தில் நகராட்சி கடையை வாடகைக்கு எடுத்தவர்கள், பஸ் நிலையத்திற்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் வருவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லையென்றால், ஏலம் எடுத்த கடைகளை நகராட்சியிடம் ஒப்படைக்கப்போவதாக எச்சரித்துள்ளனர்.இந்த பிரச்னையில் கலெக்டர் தலைமையிட்டு, நகராட்சி பஸ் நிலையத்திற்குள் அனைத்து அரசு மற்றும் தனியார் பஸ்கள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.