திண்டிவனம்-திருவண்ணாமலை ரயில் பாதை திட்டம்… விரைவுபடுத்தப்படுமா?:மாவட்ட எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் களமிறங்க வலியுறுத்தல்.

24

செஞ்சி: திண்டிவனம் – செஞ்சி – திருவண்ணாமலை புதிய ரயில் பாதை திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு ஆர்வம் காட்டும் நிலையில் திட்டத்துக்கு தேவையான நிலத்தை கையகப்படுத்துவதற்கு, தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள கோரிக்கை எழுந்துள்ளது. திண்டிவனம்-செஞ்சி-திருவண்ணாமலை இடையே, 71 கி.மீ. தொலைவுக்கு புதிய ரயில் பாதை அமைக்கும் திட்டம் கடந்த, 2006-07ம் ஆண்டு ரயில்வே திட்டத்தில் சேர்க்கப்பட்டு, 2008ம் ஆண்டு செஞ்சியில் அடிக்கல் நாட்டு விழா நடந்தது.தற்போது, 18 ஆண்டுகள் முடிந்து விட்ட நிலையில் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பணியை மாநில அரசு முழுமையாக செய்யவில்லை. இதனால், மத்திய அரசு கடந்த, 5 ஆண்டுகளுக்கு முன்பு திட்டத்தை கைவிடுவதாக அறிவித்தது.மீண்டும் செயல்படுத்த முடிவு பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று திட்டத்தை மீண்டும் செயல்படுத்த ரயில்வே வாரியம் இந்த ஆண்டு முடிவுசெய்தது.இதற்கான அறிவிப்பை ரயில்வே துறை அமைச்சர் கடந்த மார்ச் மாதம் லோக்சபாவில் வெளியிட்டார். திட்டத்துக்கு தற்போதைய மதிப்பீட்டின்படி ரூ.1,400 கோடி செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திட்டத்தை 2028ம் ஆண்டுக்குள் முடிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.276 ஹெக்டேர் நிலம் தேவை இந்த திட்டத்துக்கு மொத்தம், 276 ஹெக்டேர் நிலம் தேவைப்படுவதாக ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், 33 ஹெக்டேர் நிலம் மட்டுமே கையகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மேலும் 243 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்த வேண்டியுள்ளது.எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் திட்டம் நடைபெறும் திண்டிவனம் முதல் திருவண்ணாமலை வரையிலாள பகுதியில் விழுப்புரம், ஆரணி, திருவண்ணாமலை லோக்சபா தொகுதிகளும் திண்டிவனம், மயிலம், செஞ்சி, கீழ்பெண்ணாத்துார், திருவண்ணாமலை ஆகிய சட்டசபை தொகுதிகளும் உள்ளன.தற்போது விழுப்புரம் எம்.பி.,யாக வி.சி., கட்சியை சார்ந்த ரவிக்குமார், ஆரணி தொகுதி எம்.பி., யாக தி.மு.க.,வை சேர்ந்த தரணிவேந்தன், திருவண்ணாமலை எம்.பி.,யாக தி.மு.க., வை சேர்ந்த அண்ணாதுரை உள்ளனர்.சட்ட சபை தொகுதிகளில் திண்டிவனத்தில் வி.சி., கட்சியை சேர்ந்த அமைச்சர் வன்னி அரசு, மயிலத்தில் அ.தி.மு.க.,வை சேர்ந்த முன்னாள் அமைச்சர் சண்முகம், செஞ்சியில் பா.ம.க., வை சேர்ந்த கணேஷ்குமார், கீழ்பெண்ணாத்துாரில் அ.தி.மு.க.,வை சேர்ந்த ராமச்சந்திரன், திருவண்ணாமலையில் தி.மு.க.,வை சேர்ந்த முன்னாள் அமைச்சர் வேலு ஆகியோர் எம்.எல்.ஏ., க்களாக உள்ளனர்.நில எடுப்பு விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டத்தில், 243 ஹக்டேர் நிலம் கையகப்படுத்த வேண்டும். இந்த பணிகளை ரயில்வே அமைச்சகம், மாநில அரசு, மாவட்ட நிர்வாகம், வருவாய்த்துறை மற்றும் தென்னக ரயில்வே அதிகாரிகளுடன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பணி முடியும் வரை தொடர்ந்து கண்காணித்து தேவையான உதவிகள், ஆலோசனைகளை வழங்க வேண்டும்.நிலம் கையகப்படுத்த காலக்கெடுவை நிர்ணயம் செய்யவும், நில உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, இழப்பீட்டை இறுதி செய்து விரைவாக வழங்க வேண்டும். நிலம் கையகப்படுத்த பட்ட பின்னர் நிலத்தை ரயில்வே துறையிடம் ஒப்படைக்க வேண்டும்.முக்கியத்துவம் செஞ்சி வழியாக இந்த ரயில் பாதை அமைந்தால், திண்டிவனம் மற்றும் திருவண்ணாமலை மட்டுமின்றி சுற்றுவட்டார கிராமங்களும் ரயில் இணைப்பை பெறும்.தாமதம் வேண்டாம் இரண்டாவது முறை அறிவிப்பு வெளியாகி, 5 மாதங்கள் கடந்து விட்டன. 18 ஆண்டுகளுக்கும் மேலாக எதிர்பார்க்கப்படும் இந்த திட்டத்தில் தற்போது ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை பயன்படுத்தி நிலம் கையகப்படுத்தும் பணியை இனியும் தாமதம் இன்றி செய்ய தமிழக அரசு தனியாக ஒரு கண்காணிப்பு அதிகாரியை நியமிக்க எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் தமிழக அரசை தனித்தனியாகவோ, கூட்டாகவோ வலியுறுத்த வேண்டும்.பணிகளை முழுமையாக நிறைவேற்றி, 2028ல் திட்டம் நிறைவு பெற எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஒருங்கிணைந்து களப்பணியில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

You might also like