விழுப்புரம்: தீபாவளி சீட்டுப் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு – பெண் மிரட்டப்பட்ட விவகாரத்தில் நால்வர் மீது வழக்கு
Villupuram News : விழுப்புரம் அடுத்த கஞ்சனூரைச் சேர்ந்தவர் வீரமணி. இவர் அப்பகுதியில் தீபாவளி பண்ட் சீட்டு நடத்தி வந்துள்ளார். இவரிடம் விக்கிரவாண்டியைச் சேர்ந்த ராதிகா, சந்திரா, அரவிந்த், பிதா ஆகியோர் உறுப்பினர்களாகச் சேர்ந்துள்ளனர். இந்தச் சூழலில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீரமணி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.
இதையடுத்து, சீட்டு உறுப்பினர்களான அந்த நால்வருக்கும் சேர வேண்டிய தலா ₹18,000 தவணைத் தொகையை வீரமணியின் குடும்பத்தினர் திருப்பித் தர வேண்டியிருந்தது. இந்நிலையில், கடந்த 16 ஆம் தேதி வீரமணியின் மனைவி வாசுகி விழுப்புரம் கமலா நகர் பகுதியில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த ராதிகா மற்றும் அவரது உறவினர்கள் நால்வரும் சேர்ந்து, தங்களுக்குத் தர வேண்டிய பணத்தை உடனடியாகத் தருமாறு கேட்டு வாசுகியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். மேலும், அவரைத் தாக்கி கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட வாசுகி அளித்த புகாரின் அடிப்படையில், விழுப்புரம் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி ராதிகா உள்ளிட்ட நால்வர் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தீபாவளி சீட்டுப் பணத் தகராறில் பெண் மிரட்டப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.