இ-நாம் 2.0 திட்டத்திற்கு வியாபாரிகள் எதிர்ப்பு : 7 மாவட்டங்களில் கொள்முதல் பாதிப்பு.

33

விழுப்புரம்: தமிழகத்தில், 7 மாவட்டங்களில் ‘இ-நாம்’ 2.0 திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, விளைபொருட்களை கொள்முதல் செய்யாமல், வியாபாரிகள் ‘திடீர்’ ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளதால், விவசாயிகள் பாதிக்கப்பட்டனர்.
தமிழகத்தில் உள்ள வேளாண் மார்க்கெட் கமிட்டிகளில், விவசாயிகளின் விளை பொருட்களை கொள்முதல் செய்யும் திட்டத்தை, குறைகளின்றி ஒருங்கிணைக்கவும், தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்தும் விதத்தில், மத்திய அரசின் மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டம்(இ-நாம்) செயல்படுத்தப்பட்டு வருகிறது.விவசாயிகள், தங்கள் விளைபொருளை ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கொண்டு வந்து அதனை உள்ளூர் வியாபாரிகள் ஏலம் எடுத்து, அதற்குரிய தொகையை, வியாபாரிகள் மார்க்கெட் கமிட்டியின் வங்கி கணக்கில் செலுத்துகின்றனர்.அதனை கமிட்டி நிர்வாகத்தினர், விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு செலுத்தி வருகின்றனர். இ-நாம் திட்டத்திற்கு, ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவித்த வியாபாரிகள் மற்றும் விவசாயிகள், அதன் பயனை அறிந்து வரவேற்றதால், சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனினும், விளை பொருளுக்கான தொகை கிடைக்க, 15 தினங்கள் வரை தாமதமாவதாக விவசாயிகள் புலம்பி வந்தனர்.இந்நிலையில், இத்திட்டத்தை மத்திய அரசு கடந்தாண்டு அப்டேட் செய்து, அதற்கான விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வந்ததோடு, கடந்த மாதத்திலிருந்து ‘இ-நாம்’ திட்டம், 2.0,ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. ‘இ-நாம்’ 2.0 புதிய திட்டப்படி, வியாபாரிகள் விளை பொருளை நேரடியாக பார்த்தும் அல்லது ஆன்லைனில் பார்த்தும், இணைய வழியில் விலை வழங்கலாம். விளை பொருளை ஏலத்தில் கொள்முதல் செய்து, அதே நாளில், நேரடியாக இனி விவசாயியின் வங்கி கணக்கிற்கு பணம் செலுத்த வேண்டும்.இதனால், விவசாயிகளுக்கு உடனடி பணம் கிடைக்கும், இடைத்தரகர் பிரச்னையின்றி, வெளிப்படையான நிர்வாகம் இருக்கும் என அப்டேட் செய்யப்பட்டுள்ளது. ஆனால், இதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து, விழுப்புரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில், விளை பொருளை கொள்முதல் செய்யாமல் உள்ளதால், கடந்த வாரத்திலிருந்து விவசாயிகள் தவிப்பிற்குள்ளாகி வருகின்றனர்.இது குறித்து, வியாபாரிகள் கூறியதாவது:இ-நாம், பழைய திட்டப்படியே ஏலம் நடப்பது தான் விவசாயிக்கும், வியாபாரிக்கும் சிறந்தது. பொருளை ஏலம் எடுத்த வியாபாரிகள், வழக்கம் போல், கமிட்டியின் அக்கவுண்டில் செலுத்துவார்கள்.அதனை கமிட்டி நிர்வாகத்தினர், விவசாயிகள் கணக்கில் செலுத்துவர். இதில், ஏதேனும், நிதி குறைபாடு, புகார் எழுந்தாலும், அரசு நிர்வாக கண்காணிப்பில் இருப்பது சிறந்ததாக இருக்கிறது.ஆனால், தற்போதைய 2.0 திட்டப்படி, நேரடியாக வியாபாரியே விவசாயின் வங்கி கணக்கில் செலுத்துவதில் பல நெருக்கடிகள் உள்ளன. 2.0 திட்டத்திற்கு, அரசு (கமிட்டி) நிர்வாகமே இன்னும் அப்டேட் ஆகாமல் உள்ளது. பல விவசாயிகள், வியாபாரிகள் போதிய தொழில்நுட்ப அறிவை பெறவில்லை.ஒரே நாளில் பணம் கட்டுவதும் கடினம், பணம் செலுத்துவதில் குறை ஏற்பட்டால், விவசாயி, வியாபாரிகளிடையே பிரச்னை எழும், பணப்பரிமாற்றத்தில் தவறு நடந்தால், தீர்ப்பதில் சிரமம் ஏற்படும். இதனால், பழைய நடைமுறை தான் தொடர வேண்டும் என்றனர்.விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், 12 கமிட்டிகளில் இ-நாம் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. தற்போது, 2.0 திட்டத்தை அறிமுகப்படுத்த முயன்றதால், வியாபாரிகள் கடந்த வாரத்திலிருந்து, ஏலத்தில் பங்கேற்பதை நிறுத்தியுள்ளனர்.இதே போல், விழுப்புரம், கடலுார், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலுார், அரியலுார், பெரம்பலுார் ஆகிய மாவட்டங்களிலும், மார்க்கெட் கமிட்டிகளில், வியாபாரிகள் ஏலத்தில் பங்கேற்பதை நிறுத்தியதோடு, பழைய நடைமுறை தொடரும் வரை, போராட்டம் தொடரும் எனவும் அறிவித்துள்ளனர். இதனால், கடந்த வாரத்திலிருந்து, 7 மாவட்டங்களிலும், விவசாயிகள் விளை பொருளை கொண்டு வர தற்காலிக விடுமுறை அளிக்கப்பட்டு, விவசாயிகள் பரிதாபமாக காத்துள்ளனர்.இது குறித்து, விழுப்புரம் மாவட்ட வேளாண் விற்பனை கூட செயலாளர் அன்பழகனிடம் கேட்டபோது, ‘இ-நாம் திட்டம், அரசு சார்பில் அப்டேட் செய்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது விவசாயிகளுக்கும், வியாபாரிகளுக்கும் நலன் தரும் திட்டம். விவசாயிகள் வரவேற்றுள்ளனர். சில சிறு வியாபாரிகள், தொழில்நுட்ப நடவடிக்கைக்கு அச்சப்பட்டு தயக்கத்தில் உள்ளனர். இது தொடர்பாக, அரசு நிர்வாகம் சார்பில் விளக்கி பேசப்பட்டு வருகிறது. விரைவில், கமிட்டிகளில் ஏலம் துவங்கும், பிரச்னை முடிவுக்கு வரும்’ என்று தெரிவித்தார்.

You might also like