தோட்டக்கலை பயிர்களை பாதுகாக்க விவசாயிகளுக்கு ஆலோசனை.

43

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழை காலத்தில், தோட்டக்கலை பயிர்களை பாதுகாக்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளவும் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.விழுப்புரம் மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில், விவசாயிகள் தங்களது பயிர்களை பாதுகாத்திட ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது.குறிப்பாக, தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பு பணிகள் மற்றும் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து, தோட்டக்கலை துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.பழப்பயிர்களான, மா, கொய்யா, வாழை, பப்பாளி, எலுமிச்சை, சப்போட்டா தோட்டங்களில், மழைநீர் தேங்காமல் வடிகால் வசதி செய்ய வேண்டும்.வாழை, பப்பாளியில் நீர் தேங்கினால் வேர் அழுகல் ஏற்படும். மழைக்கு முன் போர்டோ கலவை 1 சதவீதம் அல்லது காப்பர் ஆக்ஸி குளோரைடு தெளித்து பூஞ்சாண நோய்களை தடுக்க வேண்டும்.வாழையில் இலைப்புள்ளி, பப்பாளியில் தண்டு அழுகல் தென்பட்டால், பாதித்த பகுதிகளை அகற்றி அழிக்க வேண்டும்.பலத்த காற்றில் வாழை சாயாமல் முட்டுக் கொடுக்க வேண்டும். காய்கறி பயிர்களான கத்தரி, வெண்டை, மிளகாய், பாகல், புடல், பூசணி, சுரைக்காய், கோவைக்காய், பீர்க்கங்காய் பயிர்கள், மழைநீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.பந்தல் பயிர்களில், பந்தலை உறுதியாக கட்ட வேண்டும். வாடல் நோய், இலைப்புள்ளி, பழ அழுகல் தென்பட்டால், பரிந்துரைத்த பூஞ்சாணக்கொல்லி தெளிக்க வேண்டும். மழை விட்டு ஈரம் காய்ந்த பிறகே மருந்து தெளிக்க வேண்டும்.நீண்டகால பயிர்களான தென்னை, எண்ணெய் பனை, முந்திரி, பலா தோட்டங்களில், வடிகால் வாய்க்கால்களை துார்வாரி, மழைநீர் சேகரிப்பு குழிகளில் நீரை சேமிக்க வேண்டும். தென்னையில் காண்டாமிருக வண்டு, சிவப்பு கூன் வண்டு தாக்குதலை கண்காணிக்க வேண்டும். முந்திரியில் தேயிலை கொசு தாக்குதலுக்கு உரிய பாதுகாப்பு மேற்கொள்ள வேண்டும்.மலர் பயிர்களான மல்லிகை, முல்லை, ரோஜா, கனகாம்பரம், சாமந்தி, துலுக்க சாமந்தி, கேந்தி மற்றும் கீரைகள், மூலிகை பயிர்களில், பூக்கள் அழுகாமல் தினமும் காலையில், பூக்களை பறித்து விற்பனை செய்ய வேண்டும். செடி அடியில் நீர் தேங்காமல் பார்த்து, பூஞ்சாண் தடுப்பு மருந்து தெளிக்க வேண்டும். கீரைகளில் விதை நேர்த்தி செய்து, விதைக்க வேண்டும். மூலிகை பயிர்களில் களை எடுத்து சுத்தமாக பராமரிக்க வேண்டும்.

பொது முன்னெச்சரிக்கைகள்மழைக்கு முன்பு, வடிகால் வசதியை உறுதி செய்தல், உரம், மருந்துகளை பாதுகாப்பாக சேமித்து பயன்படுத்த வேண்டும். மழை பெய்யும் போது மருந்து தெளிக்காமல் இருத்தல், நோய் தாக்கிய பாகங்களை உடனே அகற்றி அழித்தல் ஆகியவற்றை கடைபிடிக்க வேண்டும்.அவசர கால பாதிப்புகள் குறித்து, அருகே உள்ள வேளாண், தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம் என வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

You might also like