விழுப்புரம் மாவட்டத்தில் தீபாவளி பட்டாசு விற்பனை தீவிரம்: அதிகாரிகள் கண்காணிக்க வலியுறுத்தல்.
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், இந்தாண்டு வெடிக்கும் பட்டாசுகளை தவிர்த்து, கண்கவரும் புதிய ரக பட்டாசுகள் அதிகரித்துள்ளன. இது குறித்து மாவட்ட நிர்வாகம் முறையாக கண்காணித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.விழுப்புரம் மாவட்டத்தில் தீபாவளி பட்டாசு விற்பனை துவங்கியுள்ளது. விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, வளவனுார், கண்டமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில், ஏராளமான பட்டாசு கடைகள் துவங்கி விற்பனை களை கட்ட துவங்கி உள்ளன.இந்தாண்டு மாவட்டம் முழுவதும், 60 பட்டாசு கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. விழுப்புரத்தில் முக்கிய வீதிகளில், அரசு உரிமம் பெற்ற பட்டாசு விற்பனையகங்கள் துவங்கப்பட்டு, விற்பனை துவங்கி உள்ளன.இந்தாண்டு, தீவிர மழையில்லாத நிலையில், பட்டாசு விற்பனை இருமடங்கு அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பில், பட்டாசு ரகங்களை வாங்கி வந்து குவித்து வைத்துள்ளனர்.
புதுவரவு
இந்தாண்டு, வழக்கமான வெடிக்கும் பட்டாசுகளின் ரகங்கள் குறைக்கப்பட்டு, சிறார்கள், மகளிர், பெரியவர்களையும் ஈர்க்கும், கண் கவர் வடிவங்களில் புதிய பட்டாசு ரகங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, காஸ் சிலிண்டர் வடிவிலான சிலிண்டர் கிராக்கர்ஸ் அதிகம் வந்துள்ளன. இவை வெடித்து, வண்ண காகிதங்களை துாவி ஈர்க்கும்.சிறார்களை கவரும் பீட்சா வடிவம், செஸ்போர்டு, கிண்டர் ஜாய், குல்பி, ஆப்பிள் வடிவங்களிலும், ஈமு கோழி வடிவ பட்டாசும் வந்துள்ளது.இந்த ஈமு கோழி பட்டாசு வெடித்து, பெரிய முட்டை போல் வெளிவருகிறது. மீன் வடிவங்களில் மத்தாப்பு போல் ஒளிரும் பட்டாசுகள், யானை வடிவ பட்டாசு, கையில் வைத்து வாசிக்கும் கிடார் வடிவ பட்டாசு, முருகர் வேல் வடிவில் பட்டாகள் என கண்கவர் வண்ணங்களில் வந்துள்ளன.மதுப்பிரியர்களை அசத்தும், மதுபாட்டில்கள் (டின் பீர், ஒயின் பாட்டில் வடிவம்) வடிவிலும் பட்டாசுகள் வந்துள்ளன.சோலார் குக்கர், மயில் வடிவம், பட்டாம்பூச்சி வடிவங்களில் ஒளிரும் பட்டாசுகள், பல விதங்களில் வண்ண வண்ண பெட்டிகளில் அறிமுகமாகியுள்ளன.இந்த பட்டாசுகள் தலா ரூ.100, ரூ.200, ரூ.250 என விற்கப்படுகின்றன. வானில் வண்ணங்களை உமிழும் விதவிதமான ‘அவுட்டு‘ வெடிகள் உள்ளன. மேலும் புதிய கன் ஷீட்டர் அவுட் ரகம் கையில் பிடித்தே வெடிக்கலாம். இது வானில், 10 முறை சென்று கலர்களை துாவும்.வழக்கமான சிறிய ரக பட்டாசுகள், அதிக சத்தத்துடன் வெடிக்கும் லட்சுமி வெடிகள், புல்லட் பாம்கள், அனுகுண்டுகள் என வெடிக்கும் பட்டாசுகள், சர வெடிகள், ஒளிரும் மத்தாப்பு ரகங்கள், சங்கு சக்கரங்கள், புஸ்வானங்கள், பிஜிலி பட்டாசுகள், சாட்டை ரகங்கள், பறக்கும் பட்டாசுகள் என, வித விதமான பட்டாசு ரகங்கள் வண்ண பெட்டகளில் விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளன. இந்தாண்டு, அதிகளவிலான பட்டாசு ரகங்கள் வந்துள்ளன. செலவினங்கள் காரணமாக கடந்தாண்டை விட 10 சதவீதம் விலை கூடியுள்ளது.இந்தாண்டு சிவகாசியில், பட்டாசு உற்பத்தி நிறுவனங்கள் குறைவு காரணமாகவும் விலை சற்று கூடியுள்ளது. பட்டாசு கிப்ட் பாக்ஸ்கள் ரூ.200 முதல் ரூ.1,600 வரை விற்கப்படுகிறது. சிறார்களுக்கான துப்பாக்கிகள் ரூ.30 முதல் ரூ.300 வரை விதவிதமாக விற்பனைக்கு வந்துள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.