விழுப்புரத்தில் வெளுத்து வாங்கிய மழை குளம்போல் தண்ணீர் தேங்கியதால் மக்கள் அவதி.

24

Villupuram News : விழுப்புரத்தில் நேற்று மாலை, ஒரு மணி நேரம் வெளுத்து வாங்கிய மழையால், சாலையில் குளம்போல் மழைநீர் தேங்கியதாலும், மின் வெட்டாலும் மக்கள் தவிப்புக்குள்ளாகினர்.

விழுப்புரம் மாவட்டத்தில், இந்தாண்டு பருவநிலை மாற்றம் காரணமாக, செப்டம்பர் மாதம் வரை கோடை போல், கடுமையான வெயில் தாக்கம் இருந்து வருகிறது.

வழக்கம்போல், நேற்றும் காலை 10:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை கடுமை யான வெயில் தாக்கம் இருந்தது.

மாலை 4:00 மணிக்கு மேல் கருமேகம் சூழ்ந்து, 4:30 மணிக்கு காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

தொடர்ந்து 30 நிமிடம் பலத்த மழை பெய்தது. பிறகு லேசான மழை 5:30 வரை பரவலாக பெய்தது.

விழுப்புரம் நகரில் ஒரு மணி நேரம் பெய்த மழையால் சாலைகளில் மழை நீர் வழிந்தோடியது.

பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம் பகுதியில் மழைநீர் வெளியேறாமல் குளம் போல் தேங்கியது.

நேருஜி சாலையில் காந்தி சிலை அருகேயும், திரு.வி.க., வீதியில் காமராஜர் சிலை பகுதியிலும் மழை நீர் வெளியேற வழியின்றி குளம்போல் தேங்கியது. இதனால், வாகனங்கள் ஊர்ந்து சென்றதால் போக்குவரத்து பாதித்தது.

விழுப்புரம் நகரப்பகுதி மட்டுமின்றி, காணை, விக்கிரவாண்டி, வளவனுார், கண்டமங்கலம் சுற்றுப்புற கிராமப்புறங்களிலும் மின்னல் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ததால், விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

விழுப்புரத்தில், பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, ஒரு மணி நேரத்திற்குப் பிறகு படிப்படியாக விநியோகம் செய்யப்பட்டது.

கிராமப்புறங்களில் நீண்டநேரம் மின்வெட்டு ஏற்பட்டதால், தவிப்புக்குள்ளாகினர்.

You might also like