விழுப்புரம்: இன்ஸ்டாவில் நாட்டு வெடி வீடியோ போட்ட 2 வாலிபர்கள் கைது
Villupuram News : விழுப்புரம் அருகே பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் நாட்டு வெடி வெடித்து, அதை வீடியோவாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட இரு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாம்பழப்பட்டு வீதியைச் சேர்ந்த பிரபு (20) மற்றும் வழுதரெட்டியைச் சேர்ந்த மாதவன் (19) ஆகிய இருவரும் வழுதரெட்டி சுடுகாட்டுப் பகுதியில் நாட்டு வெடியை வெடிக்க வைத்துள்ளனர். மேலும், பின்னணியில் பாட்டு பாடி, இந்த சம்பவத்தை மொபைல் போனில் வீடியோ எடுத்து தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட்டுள்ளனர்.
பொதுமக்களுக்கு பீதியை ஏற்படுத்தும் வகையில் வெடி குண்டு வெடித்தது மற்றும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக இளைஞர்களை தவறான பாதைக்கு வழிநடத்துவது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து, இன்ஸ்பெக்டர் பிரகாஷ் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தி பிரபு மற்றும் மாதவன் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.