செஞ்சி: மா விவசாயிகள் பயன்பெறும் வகையில் கவாத்து முறை செயல் விளக்கம்!

62

Gingee News : செஞ்சி அருகே வீரணாமூர் கிராமத்தில், வல்லம் வட்டார தோட்டக்கலைத்துறை சார்பில் ஆத்மா 2026-27 திட்டத்தின் கீழ் மா விவசாயிகளுக்கான செயல் விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

தோட்டக்கலை உதவி இயக்குநர் கவுதம் மற்றும் அலுவலர் ராஜேஷ் ஆகியோர் தலைமையில் நடந்த இந்நிகழ்ச்சியில், மா மரங்களில் கவாத்து செய்வதன் முக்கியத்துவம், தரமான மாம்பழங்களை உற்பத்தி செய்யும் முறைகள் மற்றும் மரங்களில் இருந்து பழங்களைப் பாதுகாப்பாகப் பறிப்பது குறித்து விவசாயிகளுக்கு விரிவாக விளக்கப்பட்டது.

மா சாகுபடியில் அறுவடையின் போது ஏற்படும் முறையற்ற கையாளுதலால் சுமார் 15 முதல் 40 சதவீதம் வரை பழங்கள் சேதமடைகின்றன. இந்த வீணடிப்பைத் தடுத்து, பழங்களின் தரத்தை உயர்த்தி விவசாயிகளுக்கு ஏற்படும் பொருளாதார இழப்பைக் குறைப்பதே இப்பயிற்சியின் முக்கிய நோக்கமாகும்.

நிகழ்ச்சியின் நிறைவில், பழங்களைச் சேதமின்றிப் பறிப்பதற்காக விவசாயிகளுக்கு ஏணிகள் மற்றும் பழக்கூடைகள் வழங்கப்பட்டன. இதில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த 20 விவசாயிகள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

You might also like