விழுப்புரம்: பம்பை மற்றும் வாதானூரான் வாய்க்கால்களைச் சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை!

29

Vikravandi News : விழுப்புரம் மாவட்ட விவசாயிகளின் முக்கிய நீராதாரமான பம்பை மற்றும் வாதானூரான் வாய்க்கால்களைப் போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

1862-ம் ஆண்டு ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்ட பம்பை ஆற்று வாய்க்கால், 51 கி.மீ. பயணித்து புதுச்சேரி வாதானூரான் வாய்க்காலில் இணைகிறது. இதன் மூலம் 26 ஏரிகளும், 2,500 ஏக்கர் விளைநிலங்களும் பாசன வசதி பெறுவதோடு நிலத்தடி நீர்மட்டமும் உயர்கிறது.

கடந்த 2024-ம் ஆண்டு ஏற்பட்ட பெஞ்சால் புயல் வெள்ளத்தால் அய்யங்கோவில்பட்டு பம்பை ஆற்று அணைக்கட்டு ஷட்டர்கள், சுவர்கள் மற்றும் இருபுறக் கரைகள் கடுமையாகச் சேதமடைந்தன. இதனைச் சீரமைக்கப் பொதுப்பணித் துறை சார்பில் ரூ.13 கோடி மதிப்பில் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, தமிழக அரசின் பரிசீலனையில் உள்ளது.

தற்போது வரை நிதி ஒதுக்கப்படாததால், வாய்க்கால் முழுவதும் முட்புதர்கள் மண்டி கரைகள் வலுவிழந்து காணப்படுகின்றன. எனவே, மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் உரிய நிதியை உடனடியாக ஒதுக்கி, வாய்க்கால்கள் மற்றும் கரைகளைப் புனரமைத்துத் தர வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

You might also like