மகளிர் வெற்றிப் பயணம் திட்டம் மாவட்டத்தில் 218 பஸ்கள் இயக்கம்: கலெக்டர் துவக்கி வைப்பு.

22

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், மகளிர் வெற்றிப் பயணம் திட்டத்தில், மகளிர் இலவச பஸ் இயக்கம் துவக்கி வைக்கப்பட்டது.தமிழகத்தில், மகளிர் வெற்றிப் பயணம் திட்டத்தில், மகளிர் இலவச பஸ் இயக்கம் நேற்று துவக்கப்பட்டது. முதல்வர் விஜய், சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில், துவக்கி வைத்தார். இதனையடுத்து, விழுப்புரம் மாவட்டத்திலும் இத்திட்டம் துவக்கி வைக்கப்பட்டது.விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில், கலெக்டர் ஷேக்அப்துல் ரஹ்மான் கொடியசைத்து தொடக்கி வைத்து பயணிகளுக்கு இனிப்பு வழங்கினார்.விழுப்புரத்திலிருந்து கடலுார் மற்றும் திருவண்ணாமலை பகுதிகளுக்கு புதிய இலவச மகளிர் பஸ் இயக்கி வைக்கப்பட்டது. மகளிர் மகிழ்ச்சியோடு இலவச பஸ்சில் பயணித்தனர்.நிகழ்ச்சியில், அரசு போக்குவரத்துக் கழக பொது மேலாளர் ஜெகதீஷ் உட்பட போக்குவரத்து துறை அலுவலர்கள், ஊழியர்கள், த.வெ.க., மாவட்ட செயலாளர் மோகன்ராஜ் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.மாவட்டத்தில், விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி உள்ளிட்ட அனைத்து கிளைகளிலும் மகளிர் இலவச சேவை பஸ்கள் இயக்கம் துவங்கப்பட்டுள்ளது. அனைத்து டவுன் பஸ்கள் மற்றும் குறிப்பிட்ட எக்ஸ்பிரஸ், எல்.எஸ்.எஸ். மற்றும் டீலக்ஸ் புறநகர் பஸ்களிலும் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம்.விழுப்புரம் மாவட்டத்தில், இந்த இலவச வெற்றிப் பயணத்திட்டத்தின் மூலம் 143 டவுன் பஸ்களும், 29 புறநகர் சாதாரண பஸ்களும், 46 குறு நடைகளாக (ஷார்ட் சர்வீஸ்) இயக்கப்படும் புறநகர் பஸ்கள் என மொத்தம் 218 பஸ்கள் இயக்கப்படுகிறது.

இந்த மகளிர் இலவச பஸ் திட்டத்தில் இயக்கப்படும் பஸ்களின் முகப்பு கண்ணாடியிலும், பின் பகுதி கண்ணாடியிலும் மகளிர் வெற்றிப் பயணம் என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. இதனை அடையாளம் கண்டு, மகளிர் இலவச பயணத்திட்ட பஸ் என்பதை அறிந்து பெண்கள் இலவசமாக பயணிக்கலாம்.

You might also like