தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம் 25 குழந்தைகளுக்கு அமைச்சர் வழங்கல்.

21

திண்டிவனம்: திண்டிவனத்தில், மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம் துவக்க விழா நடந்தது.

முதல்வரின் பிறந்த நாளான ஜூன் 22ம் தேதி மற்றும் அதற்குப் பிறகு அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளுக்கு, தமிழக அரசின் தாய் மாமன் தங்க மோதிர திட்டத்தின் கீழ் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தை முதல்வர் விஜய் நேற்று மதுரையில் தொடங்கி வைத்தார். இதன் தொடர்ச்சியாக திண்டிவனத்தில் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் நேற்று மதியம் 1:00 மணியளவில் நடந்த விழாவில், திண்டிவனம் அரசு மருத்துவமனையில் பிறந்த 25 குழந்தைகளுக்கு முதல் கட்டமாக தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தின் துவக்க விழா நடந்தது.கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் நடந்த விழாவில், சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை அணிவித்தார்.தொடர்ந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 2,412 குழந்தைகள் இத்திட்டத்திற்குத் தகுதியானவர்களாகக் கணக்கெடுக்கப்பட்டுள்ளனர் முதல் கட்டமாக திண்டிவனம் அரசு மருத்துவமனையில் 25 குழந்தைகள், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் 25 குழந்தைகள் என மொத்தம் 50 குழந்தைகளுக்கு தங்க மோதிரங்கள் வழங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் நாளொன்றுக்கு சராசரியாக 100 குழந்தைகள் என்ற வீதத்தில் தொடர்ந்து தங்க மோதிரங்கள் வழங்கப்பட உள்ளன. மேலும், இத்திட்டம் தொடர்பாக 88070 44816 என்ற பிரத்யேக உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.தாய்மார்கள் காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை இந்த எண்ணைத் தொடர்பு கொண்டு தகவல்களைப் பெறலாம்.திண்டிவனம் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறை நிலவி வருகிறது.மருத்துவமனைக் கட்டடங்கள் விரிவுபடுத்தப்பட்டுள்ள நிலையில், தேவையான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை நியமிப்பதற்கான பட்டியல் அரசின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விரைவில் பணியாளர்களை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் வன்னி அரசு கூறினார்.நிகழ்ச்சியில், திண்டிவனம் சப் கலெக்டர் ஆகாஷ், பயிற்சி கலெக்டர் ஸ்ரீரஷத், இணை இயக்குநர் (நலப் பணிகள்) சாந்தகுமாரி, மாவட்ட சுகாதார அலுவலர் செந்தில்குமார், மாவட்ட துணை சேர்மன் ஷீலாதேவி, குடும்ப நல துணை இயக்குநர் பத்மாவதி, முதன்மை மருத்துவ அலுவலர் கோதை ராஜேஸ்வரி உட்பட பலர் பங்கேற்றனர்.

You might also like