ஜக்காம்பேட்டையில் உயர்மட்ட பாலம் கட்டுவதற்கான இறுதி பணிகள் தீவிரம்: திண்டிவனம்-சென்னை சாலையில் நெரிசலுக்கு விரைவில் தீர்வு.

24

திண்டிவனம்: திண்டிவனம்-சென்னை சாலையிலுள்ள, ஜக்காம்பேட்டையில் உயர்மட்ட பாலத்திற்கான இறுதி கட்ட பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. ஒரு மாதத்தில் உயர்மட்ட பாலம் போக்குவரத்து பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திண்டிவனத்திலிருந்து விழுப்புரம் செல்லும் சாலையிலுள்ள ஜக்காம்பேட்டையில் ஒருங்கிணைந்த கோர்ட் கடந்த, 2017 ம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வருகிறது. இந்த கோர்ட், திண்டிவனம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது.கோர்ட்டிற்கு திண்டிவனம் மார்க்கத்திலிருந்தும், விழுப்புரம் மார்க்கத்திலிருந்தும் வருவதற்கு சர்வீஸ் சாலை இல்லாததால், பலர் போக்குவரத்து வீதிகளை மீறி கோர்ட்டிற்கு வரும் போது, விபத்தில் பலர் சிக்கி இறந்தனர்.இதற்கிடையில் நகாய் சார்பில் தேசிய சாலை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் தொடர் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் கோர்ட் எதிரிலுள்ள சாலை அதிக அளவில் விபத்து நடக்கும் இடமாக கண்டறியப்பட்டது.இதன் தொடர்ச்சியாக திண்டிவனம் அருகே கூட்டேரிப்பட்டில் கட்டப்பட்டுள்ள உயர்மட்ட பாலம் போல், நகாய் சார்பில், ஒருங்கிணைந்த கோர்ட் எதிரில் உயர்மட்ட பாலம் கட்டுவதற்காக ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.இதற்கான பணிகள் கடந்த 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் துவங்கியது. உயர்மட்ட பாலம் கட்டும் பணிகள் ஓராண்டிற்குள் முடிவடைந்து, போக்குவரத்து பயன்பாட்டிற்கு வந்துவிடும் என்று நகாய் அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர். ஆனால் குறித்த காலக்கெடுவிற்கு உயர்மட்ட பாலம் கட்டும் பணிகள் முடிவடையவில்லை.

இதற்கிடையில் வழக்கறிஞர்கள், பொது மக்கள் தரப்பில் ஜக்காம்பேட்டையில் கட்டப்பட்டு வரும் உயர்மட்ட பாலம் கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.இதன் தொடர்ச்சியாக கடந்த 6 மாதங்களுக்கு மேலாக உயர்மட்ட பாலத்திற்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வந்தது.இதில் உயர்மட்ட பாலத்தின் மேல்பகுதியிலிருந்த கீழ்நோக்கி செல்லும், 200 மீ., பாதையின் இரு பக்கமும் பக்கவாட்டு சுவர் எழுப்பும் பணி முடிவடைந்து, பாலத்தின் மேல்பகுதியிலிருந்து இரண்டு பக்கமும் புதிய தார் சாலை போடுவதற்காக பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.இது இல்லாமல் உயர்மட்ட மேம்பாலத்தின் இரண்டு பக்கமும் சோடியம் லைட் போடுவதற்கான பணிகள் துவங்கியுள்ளது.உயர்மட்ட பாலத்தின் பணிகள் குறித்து அதிகாரிகள் தரப்பில் கேட்ட போது, ‘உயர்மட்ட பாலத்தின் பெரும்பாலான பணிகள் முடிவடைந்து, தார் சாலை போடும் பணி கடந்த ஒரு வாரமாக நடந்து வருகிறது. இதற்கடுத்து பாலத்தின் இரு பக்கமும் சோடியம் லைட்டுகள் போடும் பணி துவங்க உள்ளது. இறுதி கட்ட பணிகள் அனைத்தும் ஒரு மாத்திற்குள் முடிந்துவிடும். அடுத்து மாத இறுதியில் ஜக்காம்பேட்டை உயர்மட்ட பாலம் மக்கள் பயன்பாட்டிற்கு வந்துவிடும்’ என்று தெரிவிக்கின்றனர்.வார இறுதி நாட்களில் ஜக்காம்பேட்டையில் உயர்மட்ட பாலம் கட்டும் இடத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் நலனை கருத்தில் கொண்டு, ஜக்காம்பேட்டை உயர்மட்ட பாலம் அமைக்கும் பணியை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு நகாய் அதிகாரிகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

You might also like